திருப்பதி திருமலை ஆலயச் சிறப்பு


பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் மற்றும் திருமங்கைழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெரும் புண்ணியத்திருத்தலம் திருமலை திருப்பதி ஆகும்.

மகாவிஷ்ணுவின் கட்டளைப்படி தொண்டைமான் என்னும் மன்னனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் திருமலை திருப்பதி ஆலயம் எழுப்பப்பட்டது. பின்னர் சோழர்களாலும், பல்லவர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகரப் பேரரசாலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இங்கு வியாழக்கிழமைகளில் அதிகாலைப் பூஜைக்குப்பிறகு வேங்கடவனின் அனைத்து ஆபரணங்களும், கவசங்களும் கழற்றப்பட்டு, அவருக்கு வேஷ்டியும், துண்டும் அணிவித்து அழகு செய்கிறார்கள். இதற்கு ‘நேத்ர தரிசனம்’ என்று பெயர். அதேநாளில் பின்பு பெருமாளுக்கு அலங்கார மாற்றம் செய்விக்கிறார்கள். இதற்கு ‘பூலாங்கி சேவை’ எனப் பெயர். இந்த சேவையில் பெருமாளை தரிசித்தால் தரித்திரம், வறுமை அகன்று வாழ்வில் வளம் சேரும் என்கிறார்கள்.

திருமலையில் ஆண்டுக்கு நான்கு முறை கருவறையில் மூலவரை கவசத்தால் மூடி, கருவறை சுவர்கள், தரைப்பகுதிகள் மற்றும் அனைத்து சன்னிதிகளையும் சுத்தம் செய்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ எனப்பெயர். கட்டணம் செலுத்தி இந்த நிகழ்ச்சியில் அடியவர்கள் பங்கு கொள்ளலாம். காலை 8 மணி முதல் மதியம் 12 மணிக்குள் இந்நிகழ்வு நடைபெறுமாம். இந்த சேவையில் கலந்துகொண்டால் நம் பரம்பரை சாப, பாவங்களை நிவர்த்தி செய்யும் என்கிறார்கள்.
 



Leave a Comment