ஆஞ்சநேயருக்கு தயாராகும ஒரு லட்சத்து 8 வடைகள்.... 


அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சார்த்துவதற்காக ஒரு லட்சத்து எட்டு வடை கொண்ட மாலை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர அனுமன் சிலை கை கூப்பியபடி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக் கோயிலில் வரும் சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு, ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள்  நடைபெறவுள்ளது.

காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறும். மாலை 4 மணிக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும். விழாவுக்காக வடை  தயாரிக்கும் பணி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று  வருகிறது. 

இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மடப்பள்ளியை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் நாமக்கல் வந்து, வடை தயாரிக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு லட்சத்து 8 வடை தயாரிக்க , 2 ஆயிரத்து 250 கிலோ வடை மாவு, 650 கிலோ நல்லெண்ணெய், 35 கிலோ சீரகம், 35 கிலோ மிளகு, 35 கிலோ உப்பு ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. 

இந்தப் பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்து மாவு அரைத்து வடை தயாரிக்கும் பணி இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது. இவை அனுமன் ஜெயந்தி அன்று அனுமனுக்கு சாத்தி பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.



Leave a Comment