திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழா நாட்களில் தினமும் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. மாலையில், திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 6-ம் நாளான நாளை (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து 108 மகாதேவர் சன்னதி முன்பு சாய அபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.



Leave a Comment