தீபாவளி இனிப்பு .... அதிரசம் செய்ய எளிய முறை....


தீபாவளி கொண்டாட்டத்தின்போது பட்டாசுக்கு அடுத்து நம் நினைவுக்கு வருவது பலகாரங்கள்தான். தீபாவளி வந்து விட்டால் போதும் வீடுகளில் பலகாரங்கள் செய்து அடுக்கிவிடுவார்கள். பாரம்பரிய மணம் கொண்ட தீபாவளி இனிப்புகளில் முதலிடம் அதிரசத்துக்குத்தான்.... எனவே முதலில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்....

என்னென்ன தேவை?
பச்சரிசி மாவு - 2 கப்,
வெல்லம் - 2 கப்,
தண்ணீர் - 1 கப்,
எண்ணெய் - தேவைக்கு,
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

வெல்லத்தைப் பொடித்து, தண்ணீரில் கரைத்து, கல், மண் போக வடிகட்டி, ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றி பாகு காய்ச்சவும். முற்றின கம்பிப் பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். உடனே அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக பாகில் கொட்டி கை விடாமல் கிளறவும்.

ஏலக்காய் தூள் சேர்த்து, கிளறிய மாவை சுத்தமான வெள்ளைத் துணி போட்டு வாயை மூடி கட்டி தட்டாமல் வைக்கவும். மறுநாள் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாழை  இலையில் எண்ணெய் தடவி வட்டமாக தட்டவும். தட்டியவற்றை எண்ணெயில் போட்டு நன்கு சிவந்தவுடன் எடுத்து வடித்து வைத்துக் கொள்ளவும்.

முக்கிய குறிப்பு
பச்சை அரிசியை ஊற வைத்து வடித்து, நிழலில் உலர்த்தி, மெஷினில் அரைத்து அதிரசம் செய்தால் மிருதுவாக இருக்கும். அதிரசத்துக்குப் பாகுதான் முக்கியம். ஒரு தட்டில் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் பாகை விட்டால் கரையாமல் இருக்க வேண்டும். இதுதான் சரியான பதம்.



Leave a Comment