திருப்பதி சில முக்கிய தகவல்கள்....


நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மலர்களை உபயோகிக்கும் கோயிலாக திருமலை திகழ்கின்றது. ஒரு நாளைக்கு 380 டன் பூக்கள் இக்கோயிலில் உபயோகிக்கப்படுகின்றன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், மேல்திருப்பதி மலையில் 100 ஹெக்டேர் பரப்பில் பூந்தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் 14,000 பேரை வேலைக்கு அமர்த்தி உள்ளது. அவர்கள் 48 வெவ்வேறு துறைகளில் வேலை செய்கின்றனர். நாட்டிலேயே மிகப் பெரிய கோயில் நிர்வாக அமைப்பு இதுதான். ஒரே கோயிலில் அதிகபட்ச எண்ணிக்கையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் இந்தக் கோயிலில்தான்.

வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி 600 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் 3,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமும் சுமார் 60,000 யாத்திரீகர்களுக்குத் தினசரி இலவச உணவு வழங்கப்படுகிறது.

30 கல்வி நிறுவனங்கள், 3 பல்கலைக்கழகங்கள், மற்றும் 10 மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றை இக்கோயில் நிர்வகித்து வருகிறது.

சம்ஸ்கிருதமொழியைக் கற்றுக் கொடுப்பதற்காக நாட்டிலேயே முதன்முறையாக இங்கு 1884-ல் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. நாட்டின் முதல் இசைக் கல்லூரி இங்கு 1959-ல் திறக்கப்பட்டது. நாட்டிலேயே முதன்முறையாக, பாரம்பரியச் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி இங்கு துவக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாரம்பரியச் சிற்பக் கட்டடக்கலைப் பள்ளி.

நாட்டிலேயே முதன்முறையாக, இலவசமாகச் செயற்கைக் கை, கால்கள் பொருத்தும் மையம் 1981-ல் இங்கு துவக்கப்பட்டது. நாட்டில் முதன்முறையாக, பிச்சைக்காரர்களுக்காக, படுக்கைகள், சாப்பாடு, மருத்துவ வசதி, ஆடைகள் ஆகியவற்றை வழங்கும் பிச்சைக்காரர்கள் இல்லம் இங்கு துவக்கப்பட்டது.

தொழுநோயாளிகளுக்காக நாட்டிலேயே பெரிய தொழுநோய் இல்லம் இங்கு துவக்கப்பட்டது. அதில் இலவச மருத்துவ வசதி மற்றும் பராமரிப்புச் சேவை ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே முதன்முறையாக, அனாதைக் குழந்தைகளுக்கு ஒரு காப்பகம் இங்கு 1943 -ல் நிறுவப்பட்டது.



Leave a Comment