திருத்தணிகை மலையின் சிறப்புகள்!


முருகனுடைய ஆறுபடை வீடுகளுள் ஐந்தாவது படைவீடு திருத்தணிகை. இதன் சிறப்புகள் ஏராளம். அவற்றில் சிலவற்றை காண்போம். முருகப் பெருமான் தானே தேர்ந்தெடுத்து அமர்ந்த தலமாதலால் ஸ்கந்தகிரி, செல்வங்கள்  யாவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் ஸ்ரீபரிபூரணகிரி, உலகின் மூலாதாரமான  ஈசனே தணிகாசலனை இங்கு பூஜித்ததால் மூலாத்திரி, பக்தர்களின் கோரிக்கைகள்  நிமிடத்தில் நிறைவேறும் தலம் என்பதால் தணிகாசலம், இங்கு நாள் தோறும்  கருங்குவளை மலர்கள் மலர்வதால் அல்லகாத்திரி, முருகப் பெருமான் பிரணவப்  பொருளை உரைத்த தலம் என்பதால் பிரணவதான நகரம், இந்திரன் வரம் பெற்ற தலம் என்பதால் இந்திரநகரி, நாரதருக்கு விருப்பமான தலமாதலால் நாரதப்ரியம், அகோரன்  என்ற அந்தணன் முக்தி பெற்ற தலமாதலால் அகோரகல்வயைப்ரமம், நீலோற்பல மலர்கள்  நிறைந்த இடமாதலால் நீலோத்பலகிரி, கழுநீர்க் குன்றம் மற்றும் நீலகிரி,  கல்பத்தின் முடிவிலும் அழியாத தலம் ஆதலால், கல்பஜித் என்றும் பெயர் பெற்றது  திருத்தணிகை என்கிறார்கள். உற்பலகிரி, செங்கல்வகிரி, சாந்தரகிரி, நீலகிரி, குவளைச்  சிகரி ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு.

திருத்தணி  முருகனை மும்மூர்த்திகள் மட்டுமின்றி நந்திதேவர், வாசுகி நாகம்  மற்றும் அகத்திய முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர். சிவபெருமான், திருத்தணிகையில் முருகப் பெருமானை தியானித்து பிரணவ  மந்திரத்தின் பொருள் உபதேசிக்கப் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.  மைந்தனின் உபதேசத்தால் மகிழ்ந்த சிவபெருமான், வீர அட்டகாசமாகச் சிரித்ததால்,  வீரட்டானேஸ்வரர் எனும் பெயர் பெற்றார். ஸ்ரீவீரட்டானேஸ்வர் திருக்கோயில் திருத்தணிக்கு கிழக்கே, நந்தியாற்றின் வடகரையில் உள்ளது. பிரம்மனின்  மனைவி சரஸ்வதிதேவியும் தணிகை வேலனை வழிபட்டு அருள்பெற்றதாக புராணங்கள்  கூறுகின்றன. இந்தத் தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தமும் இதற்கு சான்று.இவ்வாறு பல சிறப்புகளை கொண்டுள்ளது திருத்தணி முருகன் கோவில்.



Leave a Comment