வினைகளைத் தீர்க்க...விரதம் இருங்கள்!


இறை வழிபாட்டில் எத்தனையோ ரகசியங்களும், நுணுக்கங்களும் உள்ளன. இறைவனோடு இரண்டற கலக்க வேண்டும் என்பதையே எல்லா வழிபாடுகளும் நமக்கு உணர்த்துகின்றன. என்றாலும் இம்மையில் எல்லா வித சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் இறைவனிடம் வேண்ட தவறுவதில்லை.

இறைவனிடம் எல்லாவற்றையும் உரிமையோடு கேட்ட ஆதிகாலத்து மக்களின் பழக்கம், நாளடைவில் பல்வேறு வடிவங்களாக மாறியது. அதில் ஒன்றுதான் எதுவும் சாப்பிடாமல், பட்டினி இருந்து, உண்ணாவிரதம் மேற்கொள்வது ஆரோக்கிய வாழ்க்கைக்கு விரதம் அவசியமானது என்ற அறிவியல் உண்மை உறுதிபடுத்தப்பட்ட பிறகு அது ஆன்மீகத்தில் ஒரு அங்கமாக ஐக்கியமாகி விட்டது. இன்று உண்ணா நோன்பு இருப்பது என்பது உலகில் எல்லா மதத்திலும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

குறிப்பாக இந்து மதத்தில் விரதம் இருப்பது அதிகமாக உள்ளது. நாள் விரதம், வார விரதம், மாத விரதம் என்று இந்து மதத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கும் விரதம் உள்ளது.இந்த விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது வரையறுத்து கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக உண்ணாவிரதம் இருந்து இறைவழிபாடு செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது.

குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விரதம் இருப்பதை தவறாமல் கடைபிடிக்கிறார்கள். விரதம் இருந்து இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது நிச்சயமாக தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்று நம்புகிறார்கள்.ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு வகை விரத வழிபாடு உள்ளது. பெரும்பாலான விரதங்கள் நாள், திதி மற்றும் பண்டிகைகளை பின்பற்றியே வருகின்றன. அந்த நாட்களில் விரதம் இருந்து சாமியை கும்பிடுவதால் பக்தர்களுக்கு திருப்தி உண்டாகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் வாரம் ஒரு தடவை உண்ணாவிரதம் இருப்பது நல்லது என்று சொல்கிறார்கள். இந்து மத பண்டிகை நாட்களில், அடிக்கடி விரதம் இருக்கும் போது, நம்மையும் அறியாமல் நாம் நம் உடம்பை மேம்படுத்திக் கொள்கிறோம். எனவே மிகவும் திட்டமிட்டு உண்ணாவிரதம் இருப்பவர்கள் ஆன்மிக பலம் பெறுவதோடு ஆரோக்கிய பலத்தையும் பெறுகிறார்கள்.



Leave a Comment