சந்திர கிரகணத்தின் போது சிறப்பு பூஜைகள்


சந்திர கிரகணத்தை முன்னிட்டு காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

ஸ்ரீ காளஹஸ்தி திருக்கோயில் ராகு, கேது தோஷம் காரணமாகத் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினர் நாகப் பிரதிஷ்டை பூஜை செய்வது வழக்கம். இதைத் செய்வதால், நீண்ட காலமாக தடைப்பட்டு வரும் திருமணம் உடனடியாக நடந்தேறும் என்பது இந்து மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.

சந்திர கிரகண காலங்களில் மற்ற கோயில்கள் 5 மணி நேரத்திற்கு முன் நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்தவுடன் நடை திறந்து, சுத்தி, புண்யாவசனம் உள்ளிட்ட காரியங்கள் நடைபெற்ற பின் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புவது வழக்கம். ஆனால், காளஹஸ்தீஸ்வரா் கோயிலில் மட்டும் சூரிய, சந்திர கிரகண காலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

சந்திர கிரகணத்தால், கிரகண காலத்தில் இந்தக் கோயிலின் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றது. இரவு 11.54 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் முழு கிரகணம் சனிக்கிழமை அதிகாலை 1 மணிக்குத் தொடங்கி அதிகாலை 2.43 மணிக்கு முடியும். தொடர்ந்து பகுதி சந்திரகிரகணம் அதிகாலை 3.49 மணிக்கு முடிவடையும். கிரகணத்துக்கு இடையில் அதாவது நள்ளிரவு 1.53 மணிக்கு இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

கோயிலில் முன்கூட்டியே பதிவு செய்த பக்தர்கள் நாளை நள்ளிரவு நடைபெறும் சந்திர கிரகண பூஜையில் பங்கேற்கலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், கிருத்திகை, ரோகிணி, உத்திரம், ஹஸ்தம், நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சாந்தி பரிகாரம் செய்யதுகொள்ளலாம்.



Leave a Comment