நலம் தரும் கொரட்டூர் சியக்காத்தம்மன்!


ஏற்றமிகு ஏரி நகர்புறம் என்றும் கிராமப்புறம் என்றும் சொல்ல முடியாத இடைப்பட்ட இடத்தில் இருக்கும் கொரட்டூரில் வீற்றிருக்கிறாள். சீயக்காத்தம்மன் என்று சொல்லப்படும் சேய்காத்த அம்மன்.

சென்னை கோயம்பேட்டிலிருந்து 5 கி.மீ அருகில் கொரட்டூர் ரெயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இச் சேய்காத்த அம்மன் திருக்கோயில். பழங்காலத்தில் கொரட்டூர் அக்ரஹாரம் என்பது சாதுக்கள் மற்றும் ரிஷிகள் வாழ்ந்து வந்த இடமாக இருந்து வந்தது. அப்போது ஜினர்கள் பெயரைக் கொண்ட அரக்கர்கள் தோன்றி, சாதுக்கள், ரிஷிகளை அச்சுறுத்தி வந்தனர் அப்போது சாதுக்கள் அணைவரும் சிவனை பிரார்த்திக்க, சிவன் சக்தியிடம் அந்த அரக்கனை சம்ஹாரம் செய்யுமாறு கட்டளையிட்டார். அதன்படி அம்மன் பராசக்தியாக உருவெடுத்து அந்த அரக்கர்களை அழித்தாள். மேலும் அந்த அரக்கனின் நிறைமாத கர்ப்பிணி மனைவியாய் இருக்கும் அரக்கியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை ஒரு காதில் மாட்டிக் கொண்டு எல்லா அரக்கர்களையும் சம்ஹாரம் செய்து பக்தர்களுக்கு பராசக்தியாக இங்கு காட்சியளித்தார் என்று இத்தலவரலாறு கூறுகிறது.

 இத்திருக்கோயிலில் அம்பாள் காதில் குழந்தையுடனும், அவள் திருவடிகளின் கீழ் ராஜரிஷி அவர்களால் அமைக்கப்பட்ட ­ஸ்ரீ சக்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்திருத்தலத்தில் சப்த கன்னிகளான பிராமணி, வைஷ்ணவி, கவுமாரி, மகேஷ்வரி, மகேந்திரி, சாமுண்டி, வராகி ஆகியோர் குடிகொண்டுள்ளனர்.

இத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராரணைகள் நடைபெறும். மேலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பால்அபிஷேகம், வேப்பிலை தரிப்பு திருவிழா, சடல் போடுவது மற்றும் மிளகாய்தூள் அபிஷேகம் நடைபெறும்.

மேலும் இத்திருத்தலத்து அம்மன் திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை கிடைக்கப் பெறாதவர்கள், அம்மனை செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் நல்லது நடைபெறும். மேலும் தீராத வியாதிகள் உடையவர்கள் இத்தலத்துக்கு வந்து அம்மனை நெஞ்சுருக பிராத்தித்தால் அவர்கள் துன்பங்கள் நீங்கி நலம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



Leave a Comment