திருப்பரங்குன்ற முருகனுக்கு முக்கனி பூஜை


முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடத்திற்கான ஆனி ஊஞ்சல் திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

திருவிழா நடைபெற்ற 10 நாட்கள் தினமும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து திருவாட்சி மண்டபத்திற்கு மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் முருகப்பெருமான் வலம் வருதலும், திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் முருகப்பெருமான் அமர்ந்து ஊஞ்சலாடல் உற்சவம் நடைபெற்றது

இந்தநிலையில் நேற்று திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக முக்கனிபூஜை நடைபெற்றது. இதனையொட்டி கோவிலின் கருவறையில் உள்ள முருகப்பெருமான், துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகீரிஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகியோருக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள் படைக்கப்பட்டு மகா பூஜைகள் நடைபெற்றது.

இதேபோல கோவிலுக்குள் உள்ள அனைத்து சன்னதியிலும், சாமிகளுக்கு முன்பாக முக்கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.



Leave a Comment