முத்து அங்கியில் ஏழுமலையப்ப சுவாமி பவனி


திருப்பதி திருமலையில் நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ம் நாளான நேற்று மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, முத்து அங்கி அணிந்து 4 மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் ஜேஷ்டாபிஷேகத்தின் 2-ம் நாளான நேற்று, முத்து அங்கியில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. இதில் முதல் நாள் மாலை உற்சவரான மலையப்ப சுவாமி, வைர கவச அலங்காரத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு வைர கவசத்தில் காட்சியளிக்கும் மலையப்பரை காண திருமலையில் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 2-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை, முத்து அங்கி அலங்காரத்தில் மலையப்பர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிறைவு நாளான இன்று செவ்வாய்கிழமை, தங்க கவச அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் காட்சி தர உள்ளனர்.



Leave a Comment