பிரம்மஹத்தி தோஷம் திருக்கண்டியூர்


தஞ்சாவூரில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கண்டியூர். இந்த பழமை வாய்ந்த, வரலாற்று சிறப்பு பெற்ற தலத்தில் பிரம்ம சிரகண்டீசுவரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற தலமாக விளங்கும் இந்தக் கோவிலில் இறைவனாக பிரம்ம சிரகண்டீஸ்வரரும், இறைவியாக மங்களநாயகியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இத்தல ஈசனுக்கு பிரம்ம சிரகண்டீசர் என்று பெயர். பிரம்மாவுக்கான தனிக்கோயில் இது என்று சொல்லலாம். ஜீவன் ததும்பி நிற்கும் அற்புதச் சிலை. சரஸ்வதி தேவி தனது கணவனோடு அடக்கமாக, நான்கு கரங்களோடு கல்வியும், ஞானமும் சேர்ந்தி ழைத்துத் தரும் ஞான வாணியாக வீற்றிருக்கிறாள். பிரம்மனின் படைப்பில் தம் சக்தியின் நீட்சியைச் செலுத்தி கலைச் செல்வத்தை வாரி வழங்கும் வெள்ளாடை நாயகி. இந்தக் கோயிலுக்கு எதிரிலேயே ஹர சாபவி மோசனப் பெருமாள் ஆலயமும் உள்ளது. ஈசன் பிரம்மாவின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷத்தை இப்பெருமாள்தான் நீக்கினார். இந்த ஆலயத்தில், கல்விக் கடவுள் ஹயக்ரீ வருக்கென்று சந்நதியும் அமைந்துள்ளது.

ஸ்தல வரலாறு :

ஒரு சமயம் பிரம்ம தேவர், தான் படைத்த ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டார். உடனே அந்த பெண் அம்பாளிடம் சென்று நடந்ததை கூறி முறையிட்டார். அம்பாள், சிவனிடம் முறையிட சிவன் கோபம் கொண்டு, உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்தார். பின்னர் பிரம்மாவின் ஒரு தலையை நகத்தினால் கொய்து கண்டனம் செய்தமையினால் இந்த ஊர் கண்டியூர் என்று பெயர் பெற்றது.

தன் தவறை உணர்ந்த பிரம்மதேவர், சிவனிடம் மன்னிப்பு கேட்க தவம் மேற்கொண்டார். சிவனும், பிரம்மாவின் தவறை மன்னித்து அருளினார். பிரம்மாவின் தலையை கொய்தவர் என்பதால் இவருக்கு பிரம்ம கண்டீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டதாக தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

பிரம்மஹத்தி தோஷம் :

மேலும் சிவபெருமான் துண்டித்து பிரம்மதேவரின் தலை, அப்படியே ஈசனின் கையில் ஓட்டிக் கொண்டு பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. அறநெறியை உலகத்தவரும் உணர்ந்து கடைபிடிக்குமாறு தாமே அதனை கடைபிடித்து காட்ட சிவபெருமான் எண்ணினார். அதன்படி, பைரவரை பார்த்து இத்தீவினை தீர நீயும் பிச்சை ஏற்க வேண்டும் என்று கூறினார். பைரவர் பல சிவ தலங்களுக்கும் சென்று பிச்சை கேட்டு திரிந்தார்.

கண்டியூருக்கு வந்து இந்தக் திருக்கோவிலை அடைந்தவுடன் அத்தலை, சிவபெருமானின் கையை விட்டு போனது. பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. இதனையடுத்து பிரம்மதேவர் ஆணவமின்றி தன் துணைவியும் தானுமாய் இக்கோவில் இறைவனை வழிபட்டு மீண்டும் படைப்பு தொழிலை பெற்றார் என்கிறது தலவரலாறு.

பிரம்மனுக்கு தனிக் கோவில் :

ஆணவமுற்றோர் அழிவர் என்னும் உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சி நடந்த இடம் கண்டியூர் ஆகும். எத்தலத்திலும் பிரம்மனுக்கு தனிக் கோவில் கிடையாது. ஆனால் திருக்கண்டியூரில் பிரம்ம தேவருக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது. இதில் பிரம்மன், தன் பிழையை உணர்ந்து வருந்தி, பூ ஜடமாலை ஏந்தி இருகைகளும் வேண்டுகின்ற அமைப்பில் வைத்து வலப்பக்கத்தில் சரஸ்வதியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுடன் காட்சி அளிக்கிறார்.

பிரம்மா அன்னப்பறவையாக சென்று சிவபெருமானது முடியை கண்டதாக பொய் கூறிய காரணத்தால் ‘உனக்கு எங்கும் கோவில் இல்லாமல் போகக்கடவாய்’ என்று சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்திற்கு ஏற்ப இங்கு பிரம்மனுக்கும் பெரிய கோவில் இருந்தும், இடிபாடுகளுடன் வழிபாடில்லாது இருப்பது சிவ சாப வன்மை போலும்.

பிரம்மனது கோவிலுக்கு பக்கமே அரன் சாபம் தீர்த்த பெருமாள் கோவில் உள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலை புரியும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய கோவில்கள் உள்ள தலம் இதுவே.

நவக்கிரக சன்னிதியில் சூரியன் தனது மனைவியரான உஷா, பிரத்யூஷாவுடன் வீற்றிருக்கின்றார். மற்ற அனைத்து கிரகங்களும் சூரியனை பார்த்த படி உள்ளன. தவறு செய்து விட்டு மனம் வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.

திருமணம் தடை உள்ளவர்கள் வாழைக்கன்றில் மஞ்சள் கயிற்றை கட்டி இங்குள்ள இறைவனை வேண்டினால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக ஐதீகம்.



Leave a Comment