புத்தாண்டையொட்டி திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு


வைகுண்ட ஏகாதசி மற்றும் புத்தாண்டையொட்டி 5 நாட்களுக்கு 24 மணி நேரமும் திருப்பதி திருமலை மலைப்பாதை திறந்தே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சொர்க்கவாசல் திறக்கப்படுவதையொட்டி வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசியன்று திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சுக்கு வெளியே நாராயணகிரி பகுதியில் பக்தர்களுக்காக 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தற்காலிக வரிசை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதசி விழா அன்று அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சொர்க்கவாசல் திறந்ததும் அதிகாலை 5.30 மணியளவில் முதலில் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் காலை 8 மணியளவில் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். ஏகாதசி தரிசனத்துக்காக வரும் இலவச தரிசன பக்தர்கள் 28-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்படுகின்றனர். பக்தர்கள் வரிசையில் செல்ல, திருமலையில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசைகள் மற்றும் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க கொட்டகைகள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 28-ந்தேதியில் இருந்து ஜனவரி 1-ந்தேதி வரை அனைத்து ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம், சிபாரிசு கடிதங்கள் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் நடைபாதை பக்தர்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த 5 நாட்களும் 24 மணி நேரமும் திருப்பதி-திருமலை இடையே மலைப்பாதை திறந்தே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Leave a Comment