ஏழு குருக்கள் ஒரே தலத்தில் காட்சி!


 

குருமார்கள் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞான குரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி. இவர்கள் அனைவரையும், திருச்சி அருகிலுள்ள உத்தமர் கோவிலில் ஒரே இடத்தில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இங்கு பிரம்மாவிற்கும் சன்னதி உள்ளது. குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபட்டவருக்கு குருதோஷம் நீங்கும்.

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தம் முப்பெருந்தேவியருடன் மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஒரே ஆலயம் இதுதான். வேறெந்தக் கோயில்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக சப்த குருக்கள் எனப்படும் ஏழு குரு பகவான்களும் ஒருங்கே அமைந்துள்ளனர். இங்கு குருப்பெயர்ச்சி மற்றும் லட்சார்ச்சனையில் பங்கு கொள்வது எண்ணிலடங்கா நற்பலன்களை நல்கும். உலகில் வேறெந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாக படைப்புக் கடவுள் பிரம்மாவே குரு பகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில், தென்முகமாக அனுக்கிரக மூர்த்தியாக அமர்ந்து, அருகில் தனி சன்னதியில் சரஸ்வதி தேவியை தன்னுடன் கொண்டு அருள் வழங்கி வருகிறார். பிச்சாண்டார்கோவில் என்றழைக்கப்படும் இவ்வூரும், உத்தமர் கோயிலும் சைவ, வைணவ ஒருமைப்பாட்டுக்குச் சான்றாக விளங்குகின்றன. வைணவ புராணத்தின் படி பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த சிவபெருமான், பிச்சைக்காரன் வடிவத்தில் வந்து அவரது தோஷம் நீங்கப் பெற்றதால், பிச்சாண்டார் கோவில் என்ற காரணப்பெயரை இவ்வூர் பெற்றது.

 

 கோயிலில் படைப்புத் தொழில் புரியும் பிரம்மா தனி சன்னதியில் குரு பகவான் ஸ்தானத்தில் தெற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டுவன அனைத்தையும் அருளி வருகிறார். அவரது இடப்புறம் கல்விக் கடவுள் கலைவாணி ஞானசரஸ்வதி குடி கொண்டு கல்வி, கலை, ஞானம், நல்லறிவு ஆகியவற்றை வழங்கி வருகிறார். 

காக்கும் கடவுளாகிய திருமால், புருஷோத்தமர் என்ற திருநாமத்துடன் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டுள்ளார். இவரது இடப்புறம் தனி சன்னதியில், பிச்சாடனரின் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அவரது பிச்சைப் பாத்திரம் பூரணமாக நிரம்பும் அளவு அன்னமிட்ட பூரணவல்லித் தாயார் குடிகொண்டு சகல ஐஸ்வர்யங்களையும் நல்கி அழிவில்லாமல் சகல உயிர்களையும் காத்து வருகிறார். அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை புரிந்து வரும் சிவபெருமான் பிச்சாண்டவர் (பிச்சாடனர்) என்ற திருநாமத்துடன் சவுந்தர்யபார்வதியை தென்முகமாகக் கொண்டு விளங்குகிறார். பிச்சாடனராக இத்தலத்தில் அவதரித்த இறைவன், நெறி கெட்டு கர்வத்துடன் இருந்த ரிஷிகளையோ அவர்களது பத்தினிகளையோ அழிக்காமல் அவர்களின் அகம்பாவத்தை மட்டும் அழித்ததால் அவர் உத்தமராக விளங்குகிறார்.

   

சகல மேன்மைகள் தரும் மும்மூர்த்திகள்

ஆரோக்கியம், தொழில் மேன்மை, வேலைவாய்ப்பு, சுயதொழில், உத்யோக உயர்வு, திருமணம், புத்திரபாக்கியம், உயர்கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, மனநலம், வழக்குகளில் வெற்றி, மனநிம்மதி உள்ளிட்ட அனைத்து பிரார்த்தனைகளும் 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்வதனால் பிரம்மாவினால் நிறைவேற்றி வைக்கப்படுகின்றன. பிரார்த்தனை கை கூடிய பிறகு கோயிலில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை அல்லது தயிர் சாதம் தளிகை செய்து அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவு செய்ய வேண்டும். பக்தர்களுக்கு ஜாதகத்தில் விஷ்ணு தோஷம் இருந்தால் புதன் கிழமையிலும், சிவன் மற்றும் குரு தோஷம் இருந்தால் வியாழக்கிழமையிலும், நாகதோஷம் மற்றும் சுமங்கலி தோஷம் இருந்தால் வெள்ளிக்கிழமையிலும் பிரம்மாவிற்கு உகந்த ஆத்தி இலையில் அர்ச்சனை செய்வது நலம். புத்திரபாக்கியம் வேண்டுவோர் ராமபிரானின் தந்தை தசரதமகாராஜா பூஜித்த தசரதலிங்கத்தை வில்வ இலையால் எந்தநாளும் அர்ச்சனை செய்து பலன் பெறலாம். தசரதலிங்கத்திற்கு தொடர்ந்து 48 வாரங்கள் அர்ச்சனை செய்து குழந்தைப் பேறு பலருக்கு கிடைத்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.



Leave a Comment