ராமநவமி! வறுமை அகற்ற விரத வழிபாடு முறை!


ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது. சித்திரைமாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். இந்த நாளில் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதமிருந்து ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது நம்பிக்கை.

ராமநவமி அன்று காலை எழுந்து நீராடி, பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும். நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர் மாக்கோலம் போடுவார்கள்.

ஸ்ரீராமர் பிறந்தது, நன்றாக அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு.

ஸ்ரீராமர் பிறந்ததை, தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், ராமர் 14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.

ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயில்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம்உச்சரிக்கலாம்.

ராம நவமி நாளில் விரதமிருந்து மனமுருகி இறைவனை வேண்டிக் கொண்டால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலும், நாடியப் பொருட்கள் கைகூடும் என்ற ஐதீகம் உண்டு.



Leave a Comment