வீட்டில் ஐஸ்வரியம் பெருக மாசி மகம் வழிபாடு...


மாசி மகம் என்பது மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது ‘கடலாடும் விழா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிறவி என்னும் பெருங்கடலில் அமிழ்ந்து கிடக்கும் மானிட ஆன்மாவானது இறைப் பரம் பொருளின் அருட் கருணை என்னும் ஆனந்த வௌ்ளத்தில் மூழ்கித் திளைத்தல் வேண்டும் என்பதனை குறிப்பால் உணர்த்தலே இவ்விழாவின் உள்ளார்ந்த நோக்கம் ஆகும்.  இந் நன்னாளில் தான் உமையவள் தக்கனின் மகளாக அவதாரம் செய்தாள்.

மாசி மகத் தன்று தக்கன் தன் மனைவியாகிய வேதவல்லியுடன் யமுனை ஆற்றில் நீராடினான். பின் அவன் அந்நதியின் தாமரை மலரில் இருந்த வலம் புரிச் சங்கினைத் தொட அது பெண்ணாய்மாறிற்று. இச்செயல் ஈசனின் திருவருளால் நிகழ்ந்தது என்பதனை உணர்ந்து அப்பெண்ணிற்கு தாட்சாயிணி எனப் பெயரிட்டு வளர்த்தான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்தநாளில் தான் திருமால்வராக அவதாரம் எடுத்து பூமியைக் கடலில் இருந்து  மீட்டார் என வைணவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்நாள் முருகனுக்கும் உரிய நாளாகும்.
 
மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில்தான் கோவில்கள் அனைத்திலிருந்தும் தெய்வத் திருவுருவங்கள் வீதியுலாவாகப் புறப்பட்டு, புனித நதிக்கரைகள், தீர்த்தக் குளங்கள், கடல் என்று பல இடங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

மாசி மகத்தன்று புண்ணிய நதிகள், தீர்த்தக்குளங்களில் நீராடுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மாலையில் வீட்டு வாசலில் விளக்கேற்றி வையுங்கள். அம்மன் கோயிலுக்குச் சென்று அம்பிகையைத் தரிசியுங்கள். இன்றைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

மகா புண்ணிய நாளான மாசிமகத்தன்று தானம் செய்யுங்கள். வீட்டின் தரித்திரம் விலகும்; ஐஸ்வரியம் பெருகும்!



Leave a Comment