சகல செல்வங்களையும் தரும் வைகுண்ட ஏகாதசி விரதம்... அனுஷ்டிப்பது எப்படி?


ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையாக உண்ணாவிரதம் இருக்க வேண்டும். இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமையைப் பேசுவதும், விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை ஓதுவதுமாக இருக்க வேண்டும். ‘கண் விழிக்கிறோம்’ என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. மறுநாள் துவாதசி அன்று காலை 21 வகை காய்கறிகளை சமைத்து உண்ண வேண்டும். இதில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் அவசியம் இடம்பெற வேண்டும்.

துவாதசியன்று காலையில் சாப்பிட்ட பிறகு பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசி பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும். ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வதாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகல சவுபாக்கியங்களையும் அடைவர். இவ்விரதத்தால் உடல்நலமும் ஆரோக்கியத்துடன் திகழும். ‘வைகுண்ட ஏகாதசியன்று விரதம் இருப்பவர்கள், இறந்த பிறகு நேரே வைகுண்டம் செல்வார்கள். அவர்களுக்கு மறுபிறப்பே இல்லை’ என்று பக்தர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

அனுஷ்டிப்பது எப்படி?

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியை ‘வைகுண்ட ஏகாதசி’ உற்சவமாகக் கொண்டாட திருமங்கையாழ்வார் ஏற்பாடு செய்தார். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தி தியானம் செய்வதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.



Leave a Comment