சிவனின் ரிஷப வாகன தத்துவம் மற்றும் சிறப்பம்சங்கள்...


பெருமானிடம் ஏதேனும் வேண்டுதல் இருந்தால் , அதை அவர் வாயிற் காப்போன் நந்தியின் காதில் ஓதி விட்டால், சிவன் காதிலேயே ஓதியது போல ஈடேறி விடும் என்ற ஐதீகம் உண்டு. இதை நாமும் காலம் காலமாக பின் பற்றி வருகிறோம்..

சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்

ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...

என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும்கொண்டது என்பதே இதன் பொருள்.

உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு. ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார். ஒருமுறை தர்மதேவதை.. இந்த உலகில் தான் அழியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாள். இதற்காக பரம்பொருளாகிய சிவபெருமானை வேண்டி கடும் தவம் இருந்தாள். சிவபெருமானும் தர்மதேவதையின் தவத்தால் மனம் மகிழ்ந்தார். பின்னர் அவள் முன் தோன்றிய சிவபெருமான், தர்மதேவதையிடம் தவம் இருந்ததற்கான காரணத்தைக் கேட்டார்.

அப்போது தர்மதேவதை சிவபெருமானை நோக்கி இரு கரம் கூப்பி வணங்கினாள். பின்னர், ‘எம்பெருமானே! எல்லா உயிரின் தேவ வடிவமானவரே! நான் தங்களின் வாகனமாக தங்களுக்கு பயன்பட வேண்டும்’ என்றாள். இறைவனும் அந்த வரத்தை அவருக்கு அருளினார். தர்மதேவதை ரிஷப உருவம் கொண்டவள். இதனால் சிவ பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.

இது சாதாரண கருத்தை உணர்த்தவில்லை. இதனுள் மாபெரும் உண்மை உள்ளடங்கியுள்ளது. சிவன் வீற்றிருக்கும் வாகனம் சிவனுடைய பொருள் ஆகும். எனவே தர்மதேவதையின் ரிஷப வாகனமும் சிவபொருளாகி விடுகிறது. அதனால் அதற்கு அழிவு என்பது கிடையாது. உலகில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அழிவு உண்டு. ஆனால் தர்மத்திற்கு மட்டும் அழிவு என்பது இல்லை. இதனை உணர்த்தவே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி உள்ளார்.

 



Leave a Comment