கடனில்லா பெரு வாழ்வு தரும் ஐந்து நரசிம்மர்கள்


 

‘கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’  என்ற கம்பனின் வரிகள் கடன் சுமைப்பற்றி அழுத்தமாக உணர்த்துகிறது. கடன் , மனிதனை நிம்மதியில்லாமல் அல்லலுறச் செய்கிறது. மனிதர்கள் கடன் சுமை நீங்கி மன நிம்மதி பெற  சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்ம ஆலயங்களை தரிசனம் செய்தால் போதும்.

இந்த ஐந்து நரசிம்ம ஆலயங்களின் கதை சுவாரசியமானது

ஐந்து நரசிம்ம பெருமாள் கோயில்களுக்கு எவர் ஒருவர்  ஒரே நாளில் சென்று வழிபடுகிறார்களோ அவர்கள்  கடன் தொல்லை தீரும். எதிரிகள் தூர விலகி ஓடுவார்கள்.

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வாருக்கும் இந்த கோயில்களுக்கும் உள்ள உறவு முக்கியமானது  சீர்காழி நகரின் அருகில் உள்ள மங்கை மடம் எனும் ஊரில் இருந்து ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருக்கறையலூர் என்ற ஊரில் பிறந்தவர் திருமங்கை ஆழ்வார். சோழ மன்னர்கள் அரசாண்டு கொண்டு இருந்த காலத்தில் திருக்கறையலூர் பகுதியில் வைஷ்ணவப் பிரிவை சார்ந்த பல மக்கள் வசித்து வந்தார்கள். அப்போது நகரை நிர்வகிக்க அலைநாதர் எனும் வைஷ்ணவர் நியமிக்கப்பட்டார். அவருடைய மனைவியின் பெயர் அல்லித்திரட்டு என்பதாகும். அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்க அதற்கு நீலர் என்று பெயர் சூட்டினார்கள். அந்த குழந்தை வளர்ந்து வீரதீர சாகசங்களில் சிறந்து விளங்கியது.

இது  குறித்து கேள்விப்பட்ட சோழ மன்னன் நீலரை  அழைத்து தன்னுடைய படைத் தளபதியாக நியமித்தார். தனது  திறமையினால் நீலர் திருமங்கை நாட்டின் மன்னனாக மாறி விட்டதினால் அவரை திருமங்கை மன்னன் என அழைத்தார்கள். திருமங்கை மன்னன் பூர்வ ஜென்மத்தில் பகவான் விஷ்ணுவின் வில்லாக இருந்தவர்.

ஒரு சந்தர்பத்தில் திருமால் திருமங்கை மன்னன் காதில் வேறொரு மந்திரத்துக்குப் பதிலாக திருமந்திர உபதேசத்தை செய்தார். அதைக் கேட்ட திருமங்கை மன்னன் அடுத்த கணம் ஆன்மீக மேன்மைமிக்க புதிய மனிதராக மாறினார்.  அவர் பகவான் விஷ்ணு மீது பல பாடல்களை  பாடத் துவங்கினார். அதன் பின் அவரை அனைவரும் திருமங்கை ஆழ்வார் என அழைக்கலானார்கள்.

திருமங்கை ஆழ்வார் பகவான் விஷ்ணுவின் நரஸிம்ம அவதாரத்தைக் காண விரும்பினார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட விஷ்ணு பகவானும் சீர்காழியில் உள்ள திருநாங்கூர் எனும் இடத்தில் ஐந்து தோற்றங்களில் நரசிம்ம பெருமானாக காட்சி தந்தார். அப்படி  அவர் தோற்றம் தந்த ஐந்து ஆலயங்கள் திருநகரி-திருவாலி எனும் கிராமங்களை சுற்றி அமைந்து உள்ளன. அவற்றை ஐந்து நரஸிம்ம ஷேத்திரங்கள் என்கின்றார்கள்.

குறையலூர் ஆலயத்தில் உக்கிர நரஸிம்ம பெருமாள், மங்கை மடத்தில் வீர நரஸிம்ம பெருமாள்,திருநகரியில் ஹிரண்ய நரஸிம்ம பெருமாள், திருநகரியின் அதே ஆலயத்தில் யோக நரஸிம்ம பெருமாள்,திருவாலியில் லட்சுமி நரஸிம்ம பெருமாள்.

இந்த ஐந்து நரசிம்ம  திருக்கோயில்களை தரிசனம் செய்து வாழ்க்கையில் கடன், பகை இல்லாத நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் ......

                                                                   



Leave a Comment