திருமலை ஏழுமலையானுக்கு இரண்டு பிரம்மோற்சவம்


திருமலை ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10ம் தேதி முதல் 18ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் நடத்தப்பட உள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை, 2 பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஐதீகம். கடந்த 2015ஆம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற்றது. இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அனைத்து துறை தலைமை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீநிவாச ராஜு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு நடத்தப்பட உள்ளது. கருடசேவை செப்டம்பர் 13ம் தேதி முதல் 21ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. கருட சேவை 17ஆம் தேதி இரவு நடத்தப்படுகிறது. 18ஆம் தேதி தங்க ரதம், 20ஆம் தேதி தேர்த் திருவிழா மற்றும் 21ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அக்டோபர் 10-ம் தேதி முதல், 18ம் தேதி வரை 2வதாக நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதில் அக்டோபர் 14ஆம் தேதி கருட சேவை, 17ஆம் தேதி தங்க தேர் ஊர்வலம், 18ஆம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரம்மோற்சவத்தையொட்டி தினந்தோறும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமி வீதி உலா நடக்கும். கருட சேவை மட்டும் இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது.

கடந்தாண்டு பிரம்மோற்சவத்தின்போது ஏற்பட்ட அனுபவத்தைக் கொண்டு வரிசைகளில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் கழிவறை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விஜிலென்ஸ், போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

வழக்கமாக பிரம்மோற்சவத்துக்கு ஒரு மாதத்துக்கு முன் தெப்பக்குளம் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால், ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை தெப்பக்குளம் சுத்தம் செய்யும் பணி நடக்கும் என்றும் அவர் கூறினார்.



Leave a Comment