தமிழர்களின் பாரம்பரியம் கார்த்திகை தீபம்...


ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்நாளை திருக்கார்த்திகை என்றும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். சூரபத்மன் என்னும் அசுரனை வதைக்கும் பொருட்டு, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து பொறிகளை உருவாக்கினார். பொறிகள் கங்கை நதியின் சரவண பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாக மாறின.
ஆறு குழந்தைகளையும், கார்த்திகைப் பெண்கள் தாலாட்டி சீராட்டி, பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவி ஆறு சிறுவர்களையும் ஒன்றாக அனைத்து ஒரே குழந்தையாக மாற்றினாள். குழந்தையும் ஆறுதலைகள், பன்னிரெண்டு கைகள் ஒரே உடலுடன் காட்சியளித்தது. இக்குழந்தையை கந்தன், ஆறுமுகன், கடம்பன் மற்றும் முருகன் ஆகிய பெயர்களில் பார்வதி தேவி அழைத்தாள்.
முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்கு சிவபெருமான் வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தும், அவர்களைப் போற்றும் விதமாக கார்த்திகை தீப வழிபாட்டையும் அருளினார் என்று இவ்விழா கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணு மற்றும் பிரம்மதேவர் ஆகியோருக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியில், சிவபெருமான் அவர்களுக்குகிடையே ஜோதி பிழம்பாகத் தோன்றி யார் ஜோதியின் அடி, முடியைக் காண்கிறார்களோ அவரே பெரியவர் என்று கூறினார்.
பின் மாகவிஷ்ணு வராகமாகவும், பிரம்மா அன்னப்பறவையாகவும் மாறி அடி முடியை தேடிச் சென்றனர். ஜோதிப் பிழம்பின் அடியைக் காணாது மகாவிஷ்ணு திரும்பினார். முடியைத் தேடிச்சென்ற பிரம்மா வழியில் தாழம்பூவைச் சந்தித்தார். தாழம்பூ சிவனின் முடியிலிருந்து வருவதாகக் கூறியது. தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு சிவனின் முடியைக் கண்டதாக பிரம்மா கூறினார்.
தாழம்பூ, பிரம்மா ஆகியோரின் பொய்யுரைக்காக தாழம்பூ சிவ பூஜையில் இடம் பெறாது எனவும், பிரம்மாவுக்கு பூலோகத்தில் தனிகோயில் கிடையாது என்கின்ற தண்டனையையும் சிவபெருமான்விதித்தார்.
சிவபெருமான் ஜோதிப் பிழம்பாக காட்சியளித்த நாளே கார்த்திகை தீபமாகக் கொண்டாடப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.



Leave a Comment