புல்லட் பாபா கோயில்


இந்தியா ஒரு பன்முக கலாச்சாரம் மிகுந்த நாடு. பல உருவ வழிபாடுகள், விநோத சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள், வித்தியாசமான வழிபாட்டு முறைகளை மக்கள் காலம்காலமாக பின்பற்றி வருகிறார்கள். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் போன்றவர்கள் இந்தியாவிற்கு வந்து சில கோவில்களில் வழிபாடு நடத்திய பிறகுதான் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

இப்படி ஸ்டார் வேல்யூ உள்ள கோவில்களும் உண்டு. இப்படிப்பட்ட வித்தியாசமான கோவில்களை காண பல நாடுகளில் இருந்தும் நம் நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படி சுற்றுலா பயணிகளை ஈர்த்த கோவில் தான் ராஜஸ்தானில் உள்ள புல்லட் பாபா கோவில்.

இன்றைய இளைஞர்கள் மத்தியில் ராயல் என்பீல்ட் புல்லட் பிரபலமாக இருக்கும் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே பாலி என்ற மாவட்டத்தில் 350cc Royal Enfield Bullet ஐ கடவுளாக வழிபடுகின்றனர் இந்த பகுதி மக்கள்.

இந்த புல்லட் கடவுளுக்கு பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

1991ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஓம் சிங் ரத்தோர் என்பவர், பங்கடி என்ற இடத்தில் இருந்து சோடிலா என்ற இடத்திற்கு தன்னுடைய ராயல் என்பீல்ட் வண்டி மூலம் பயணம் செய்திருக்கிறார். திடீரென்று ஒரு இடத்தில் நிலைதடுமாறி ஒரமாக இருந்த மரத்தில் வண்டி மோதி விபத்து ஏற்பட்டு விடுகிறது. அந்த இடத்திலேயே ஓம் சிங் உயிரிழக்க, அவருடைய புல்லட் அருகில் உள்ள கால்வாயில் விழந்து விடுகிறது. 

அடுத்த நாள் காலையில் வந்த காவலர்கள், கால்வாயில் விழுந்த வண்டியை எடுத்துச்சென்று காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கிறார்கள். ஓர் இரவு கடந்து விடுகிறது. அடுத்த நாள் அந்த காவல் நிலையத்தில் புல்லட்டை காணவில்லை என்று காவலர்கள் பதறியடித்துக் கொண்டு தேட, அந்த புல்லட் வண்டியோ, ஓம் சிங் விபத்தில் எங்கே உயிரிழந்தாரோ அதே இடத்தில் காணப்படுகிறது.

ஆச்சர்யமடைந்த காவலர்கள் யாரோ தங்களிடம் விளையாடுகிறார்கள் என்று நினைத்து, மீண்டும் அந்த வண்டியை எடுத்து போய் காவல்நிலையத்தில் வைத்து, பெட்ரோல் டேங்கை காலி செய்து, டயரில் இருந்த காற்றையும் பிடுங்கிவிட்டார்கள். அந்த இரவும் கடந்து செல்கிறது. 

மறுநாள் காலையிலும் புல்லட் வண்டி காணாமல் போக, மீண்டும் ஓம் சிங் உயிரிழந்த இடத்தில் இருந்திருக்கிறது. இது போன்று பல முறை தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ, கிராம மக்கள் ஓம் சிங் தான் புல்லட்டில் சக்தியாக இருக்கிறார் என்று நினைத்து, அந்த புல்லட் வண்டியை வைத்து கோவில் கட்டிவிட்டார்கள்.

தற்போது வரை அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் நீண்ட பயணம் மேற்கொள்ளும்போது இந்த புல்லட் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். சிலர் காணிக்கையாக மதுபாட்டில்களையும் வைத்துவிட்டு செல்கின்றனர். நீண்ட தூரம் செல்பவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடாவிட்டால் நிச்சயம் ஆபத்தை சந்திப்பார்கள் என்றும் நம்புகிறார்கள் இந்த கிராம மக்கள். தினமும் இந்த கோவிலில் உள்ள புல்லட் வண்டிக்கு பொட்டு வைத்து, பூக்கள் தூவி மாலையிட்டு இனிப்புகள் எல்லாம் வைத்து மிகவும் நம்பிக்கையோடு வழிபாடு நடத்துகின்றனர் பாலி மாவட்ட மக்கள். 

அடுத்த முறை ராஜஸ்தான் செல்லும் போது புல்லட் பாபாவை மறக்காம பார்த்துட்டு வாங்க.

- ஹேமா, பத்திரிகையாளர்



Leave a Comment