சித்தர்கள் எனும் பேரறிவாளர்கள்!


சித்தர்கள்...என்று சொன்னாலே ஒரு சிலிர்ப்பு உச்சிமுதல் பாதம் வரை படரும். சொன்னவுடனே அவர்களின் அகண்ட பேரறிவு பற்றிய வியப்பு நம்மை உலுக்கிவிடும். நன்கு கூர்ந்து கவனித்தால் அவர்களின் அன்பு பேரண்டதைவிடப் பெரியது; அந்தப்பேரண்டம் முழுதும் நிறைந்து இருக்கும் அச்சிறு துளியில் நாம் நனைந்தால்கூடப் போதுமே என்ற எண்ணமே மேலோங்கும். 

காரணம் அவர்களே குறிப்பிடுகிறார்கள் இனிக்கும், தித்திக்கும் இறையெனும் தேனைத் தொட்டுச் சுவைக்கவில்லை.  அந்தத் தேன் இருக்கும் கலனுக்குள்ளேயே விழுந்துவிட்டோம் என்கிறார்கள், எனில் அவர்கள் அனுபவிக்கும் அந்த இறையெனும் பேரறிவு, பேரானந்தம் எத்தகைய அதி தித்திப்பானது, எவ்வளவு உயர்வானது என்பதை நாம் ஓரளவுக்காவது நம் சிற்றறிவுக்கு எட்டியவரை புரிந்துகொள்ள இயலும்.

சித்தர்கள் பற்றிய செவி வழிச்செய்திகளை விட அவர்கள் பாடல்களை சித்த மார்க்கத்தில் முறையாகப்பயணிக்கும் குருவிடம், முறையாக வெளிப்படுத்தும் சித்த மார்க்க ஆய்வாளர்களிடம் கேட்டு அறிந்து புரிந்து கொள்ள முயற்சிக்கும்போதுதான் நான் மேலே குறிப்பிட்ட வரிகளின் பொருள் புரியும்.  இல்லையெனில் சித்தர்கள் என்பவர்கள் டிவிக்களில்,செய்தித்தாள்களில் சித்த மருத்துவம் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் சிறு மருத்துவர்கள் அல்லது  குறி சொல்பவர்கள், சோதிடம் சொல்பவர்கள் என்று மட்டுமே தவறுதலாகப் புரிந்து கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிடும்.

சரி அப்படி என்றால் சித்தர்கள் யார்? அவர்கள் என்ன என்ன செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? அவர்களால் மனிதகுலம் இன்று சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு தர முடிந்ததா? அவர்கள் கடவுளர்களா? கடவுளின் தூதுவர்களா?  யார்தான் அவர்கள் எனும் கேள்விகள் பல எழுவது இயற்கை.

"என்னை நன்றாய் இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே" 

என்கிறார்  திருமூலர் சித்தர் பெருமான்.

சரி...ஏன் சித்தர்கள் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், ருஷ்ய மொழியில் என்னை நன்றாய் இறைவன் படைத்தனன், தன்னை நன்றாய் ஆங்கிலம் செய்யுமாறே, பிரெஞ்சு செய்யுமாறே, ருஷ்ய செய்யுமாறே...என்று கூறவில்லை?

அவர்கள் ஏன் தமிழைத்தவிர பிற மொழிகளில் சித்தரிலக்கியம் எழுதப்படவில்லை?

"அவனருளாலே அவன்தாள்  பணிந்து" என்பது தமிழரின் இறைபற்றிய புரிதல். அதாவது, "அவனது (இறைவனது) கால்களைப்பற்ற வேண்டுமானால் (வணங்க வேண்டுமானால்) அதற்கும் அவனருள் இருந்தால்தான் சாத்தியம்" என்பதைப்போல சித்த பெருமக்களின் அருளாசியை வேண்டி வணங்கிக் கோரி "சித்தர்கள் எனும் பேரறிவாளர்கள்" தொடரில்  சக்தி ஆன்லைன் இணையத்தில் நாம் அனைவரும் பயணிப்போம். மிகைப்படுத்தல் ஏதும் இன்றி உள்ளது உள்ளபடி அறிய முயற்சிப்போம்.  

ஓம் நமசிவய.

-  விஸ்வநாத்
 



Leave a Comment