கோவை பாலமலை ரங்கநாதர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்  


கோவை பெரியநாயக்கன்பாளைம் அருகே மேற்குதொடர்ச்சி மலையிலுள்ள பாலமலையில் தென்திருப்பதி என்றழைக்கப்படும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான ஸ்ரீ செங்கோதை அம்மன், ஸ்ரீபூங்கோதை அம்மன் சமேத அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. 

இந்த கோவிலில் தாயார், அரங்கநாதருடன் தன்வந்திரி பகவான், ஆஞ்சிநேயர், சக்கரத்தாழ்வார் பன்னிரு ஆழ்வார்கள், கருடாழ்வார், தும்பிக்கையாழ்வார்,  ராமானுஜர் கோயில்கள் உள்ளன. மேலும் இக்கோயில் உருவாக பெரும் பங்கு வைத்த பெரியவரான காளி தாசருக்கும் ஒரு கோயில் உள்ளது.

கடந்த 8ம் தேதி மாலை 4 மணிக்கு ஆச்சார்ய வர்ணத்துடன் தொடங்கிய விழாவில் மகாகணபதி ஹோமம், சங்கல்பம், முதல்கால யாக பூஜைகள், தீபாராதனை, 2ம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, பிம்பசுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் காரமடை அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் ஸ்ரீ சுதர்சன பட்டர் ஸ்வாமிகள் தலைமையில் மஹா கும்பாஷேகம் நடைபெற்றது. 

இந்த விழாவில் யாக பூஜைகளில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் கோபுரம், அம்மன் கோபுரம், ராஜ கோபுரங்களில் உள்ள விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் மற்றும் அம்மன் சாமிகளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், அபிசேக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் 

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜமாப் குழுவினருடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடனமாடி பக்தர்களை உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து பஜனை குழுவினரின் பாடல்கள் நாள் முழுவதும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 



Leave a Comment