ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி இருக்கிறது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களுள் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி . இத்திருவிழா பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என்று மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

இன்று பகல் பத்து திருமொழியின் முதல் திருநாள் ஆகும். இதனையொட்டி இன்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார் . காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். காலை 8.15 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அரையர் சேவை நடந்தது.

பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருமொழி என்றும், ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் திருவாய் மொழி என்றும் அழைக்கப்படுகிறது. பகல்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து உற்சவத்தின் 10 நாட்களும் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார். பகல் பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 17-ந்தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து திருவாய் மொழி முதல் திருநாளான 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். 24-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 25-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 27-ந்தேதி தீர்த்தவாரியும், 28-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அறங்காவலர்கள், இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment