திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது....


திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவின் உச்சக்கட்டமாக மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். மாதந்தோறும் பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் மலையை கிரிவலம் வருகின்றனர்.

இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீப திருவிழா தொடங்கியது முதல் தினமும் காலையிலும் இரவிலும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வந்து அருள்பாலித்தனர்.

முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அன்று 5 தேர்கள் அடுத்தடுத்து பவனி வந்தன. இந்நிலையில் கார்த்திகை தீப உற்சவத்தின் முக்கிய விழாவான மகாதீப பெருவிழா இன்று மாலை நடைபெற்றது.

இதையொட்டி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர அண்ணாமலையார் மலைஉச்சியில் இன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது.

மகாதீபம் ஏற்றுவதற்காக முன்னதாக அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை சில நொடிகள் மட்டுமே காட்சிதரும் ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆனந்த நடனமாடியபடி கோயில் கொடி மரம் முன்பு காட்சியளித்தார்.

அப்போது தங்க கொடிமரம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அகண்டத்தில் கற்பூர தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது. இன்று ஏற்றப்பட்ட மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சிதரும்.

மகா தீபத்திருவிழாவை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.



Leave a Comment