நினைத்ததை நடத்தி வைக்கும் மகா காளி


விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு கிராமத்தின் எல்லைப் பகுதியில் ஸ்ரீசாந்த மகா காளியம்மனாக அவதாரம் எடுத்து ஊரை பாதுகாத்து வருகிறாள் மகாகாளி. பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து காளியம்மனை மனதார வணங்கி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் வெற்றிபெறும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகுகால பூஜைகள் சிறப்பு வாய்ந்தது. பௌர்ணமி, அமாவாசைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

பக்தர்கள் இந்த ராகுகால பூஜையில் கலந்து கொள்வதன் மூலம் திருமண தடை, கடன்தொல்லை, குடும்ப சண்டை, குழந்தை பாக்கியம் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவதாக நம்புகின்றனர். இங்குள்ள கல்வி விநாயகரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம், தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்றும் நம்பப்படுவதால் மாணவ, மாணவிகள் இந்த கல்வி விநாயகரை பயபக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

ஸ்ரீசாந்த மகாகாளியம்மன் சுமார் 1300 வருடங்குளுக்கு முன்னர் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்திற்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் விக்கிரமாதித்த மன்னன் நாடாறு மாதம் காடாறு மாதம் ஆட்சிசெய்யும் போது இந்த சிறுவந்தாடு கிராமத்தில் உள்ள காளியம்மனை வழிபட்டதாக அப்பகுதி பெரியவர்கள் கூறுகின்றனர். காளிதேவியை பத்ர காளியாகவும், மகா காளியாகவும், வழிபட்டு வந்த மக்கள் தற்போது ஸ்ரீசாந்த மகா காளியம்மனாக மனதில் முன்நிறுத்தி வழிபட்டு வருகின்றனர். இந்த அம்மன் வடக்கு நோக்கி காட்சி தந்து வருகிறாள். திருவக்கரை வக்ர காளியம்மனுக்கு அடுத்தாக இந்த சாந்த மகாகாளியம்மனைத்தான் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

சிறுவந்தாடு சாந்த மகா காளியம்மனும், திருவக்கரை வக்கர காளியம்மனும் ஒரே நேர்க்கோட்டில் அமையப் பெற்றுள்ளது அற்புத நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளது. கோயிலின் தலவிருட்சடாக வில்வ மரம் திகழ்கிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட துர்க்கை மற்றும் கல்வி விநாயகர் ஆகிய சிலைகள் அதன் பழமையை காட்டுகின்றது.

உட்புர கோயில்களாக சிவலிங்கம், துர்க்கை, நவகிரகங்கள், நாகம்மன் சன்னதிகள் உள்ளன. கோயில் கருவறை மேல் வழக்கமாக கோபுரம் இருக்கும். ஆனால் சாந்தமகாகாளியம்மன் கோயில் கருவறை மேல் பகுதியில் பொற்கூரை வடிவம் அமைக்கப்பட்டு 3 செப்புக் கலசங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சிதம்பரம் நடராஜர் கோயில் பொற்கூரையை நினைவுபடுத்துகிறது.

விழுப்புரத்தில் இருந்து வளவனூர் வழியாக சிறுவந்தாடு வந்தால் 6 கி.மீ தொலைவிலும், புதுவையில் இருந்து மடுகரை வழியாக 32 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து மடுகரை வழியாக 30 கி.மீ தொலைவிலும் இந்த சாந்தமகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. பேருந்து வசதி உண்டு. வார நாட்களில் ராகுகால நேரங்களில் நடை திறந்திருக்கும்.



Leave a Comment