நலம் தரும் அய்யாளம்மன்!


 

 திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் காவிரி கரையோரம் அமைந்துள்ளது அய்யாளம்மன் கோவில் கிழக்கு நோக்கி காட்சி தரும் இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவில் முன்பு இரண்டு குதிரை சிலைகள் கம்பீரமாக உள்ளன. ஆலயத்திற்குள் நுழைந்ததும் மகாமண்டபம் உள்ளது. வடக்கு பிரகாரத்தில் கருப்பண்ணசாமி அருள்பாலிக்கிறார். சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமர பொந்தில் சூல உருவில் இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிழக்கில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாளும், தெற்கில் சப்த கன்னியர் திருமேனிகளும் உள்ளன.

மேலச் சிந்தாமணியில் உள்ள அய்யாளம்மன் ஆலயத்தில் தினமும் இரண்டு கால பூஜை நடக்கிறது. இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. ஆடி 18-ல் அன்னைக்கு வளையல் அலங்காரம், சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை காப்பு கட்டி திருவிழா போன்றவை வெகு விமரிசையாக நடைபெறும். சித்திரை விழாவின் முதல் 8 நாட்கள் பக்தர்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மறுநாள் அம்மன் ஊர்வலம் புறப்படும். 10-ம் நாள் தேர் திருவிழா தொடங்கி மூன்று நாட்கள் கோலாகலமாக விழா அரங்கேறும். இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். இது தவிர 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா இங்கு பிரசித்தி பெற்றதாகும். 9 நாட்களும் இத்தல அன்னையை, விதவிதமாக அலங்கரிப்பார்கள். இதை காணவே ஏராளமான மக்கள் ஆலயம் வருவார்கள். இந்த 9 நாட்களும் அன்னைக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மேலும் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

குழந்தை பேறு வேண்டுவோர் அன்னைக்கு எலுமிச்சை பழ மாலையும், திருமண வரம் வேண்டுவோர் அன்னைக்கு புடவை சாத்தியும் வழிபாடு செய்தால், வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

 

 

 



Leave a Comment