அர்ச்சுணன் வணங்கிய...உய்ய வந்த பெருமாள்!


கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் ஷோரனூர் கள்ளிக்கோட்டைக்கு இடையில் அமைந்திருக்கும் பட்டாம்பி என்னும் இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவித்துவக்கோடு திருத்தலம். இக்கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் 67-வது திருத்தலமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் அர்ச்சுனன் நிறுவிய விஷ்ணு மூலவராக இருக்கிறார் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த விஷ்ணுவை, சமஸ்கிருதத்தில் ‘அபயப்பிரதான்’ என்றும், தமிழில் ‘உய்ய வந்த பெருமாள்’ என்றும் அழைக்கின்றனர்.

முற்காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசத்திற்காக இப்பகுதிக்கு வந்தனர். அங்கே, அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் வியூகத் தோற்றம் தெரிந்தது. அதனைக் கண்டு மகிழ்ந்த பஞ்சபாண்டவர்கள் அவ்விடத்தில் ஒரு கோவிலைக் கட்ட முடிவு செய்தனர். அங்கு முதலில், அர்ச்சுனன் ஒரு மகாவிஷ்ணு சிலையினை நிறுவி வழிபட்டான். அவனைத் தொடர்ந்து, தருமர், பீமன் ஆகியோர் தனித்தனியே விஷ்ணு சிலைகளை நிறுவ, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சேர்ந்து ஒரு விஷ்ணு சிலையை நிறுவி வழிபட்டனர்.

இச்சன்னிதிக்கு வலதுபுறம், தருமர் நிறுவிய விஷ்ணு சிலையுடனான சன்னிதி, நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரால் நிறுவப்பட்ட விஷ்ணு சிலையுடனான சன்னிதி என்று இரண்டு சன்னிதிகள் அமைந்திருக்கின்றன. இடதுபுறம் சிறிது பின்புறமாக, பீமன் நிறுவிய விஷ்ணு சிலையுடைய சன்னிதி இருக்கிறது. பஞ்சபாண்டவர்கள் நிறுவிய நான்கு விஷ்ணு சிலைகளும் நின்ற கோலத்தில், சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரையைக் கொண்ட நான்கு கைகளுடன் அமைந்திருக்கின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் இங்குள்ள காசி விசுவநாதர் சன்னிதிக்குச் சென்று வழிபடுகின்றனர். அதன் பின்னர், மூலவரான உய்ய வந்த பெருமாள் மற்றும் பிற சன்னிதிகளில் உள்ள விஷ்ணுவையும் தீபம் ஏற்றித் துளசி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். இங்கு வழி படுபவர்களுக்கு மனதில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் என்கின்றனர். மேலும் திருமணத்தடை, வேலைத்தடை உடையவர்கள் இக் கோவிலில் வந்து வழிபட்டால் அனைத்தும் கைகூடும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.



Leave a Comment