திருமண வரம் அருளும்...பெரியநாயகி!


விழுப்புரம் மாநகரின் வடகிழக்குப் பகுதியில், திரு.வி.க. சாலையில் அமைந்துள்ளது. பெரியநாயகி சமேத கயிலாசநாதர் திருக்கோயில்.சிவபெருமானை தரிசித்து அவரிடம் அர்ச்சனை செய்த மலர் ஒன்றைக் கையில் ஏந்தியபடி வந்த துர்வாச முனிவர். ஐராவதம் என்ற யானையின் மீது அமர்ந்து வந்த இந்திரனைக் கண்டபோது. தன்னிடம் இருந்த மலரை, இந்திரனுக்கு வழங்கினார் முனிவர். யானை மேலிருந்த இந்திரன், அங்குசத்தினால் அம்மலரை வாங்கி, யானையின் தலைப்பகுதியில் வைத்த போது யானை தன் தலையில் இருந்த மலரை கீழே தள்ளி, காலால் மிதித்தது.இதனைக் கண்டு கோபமுற்ற துர்வாச முனிவர், ‘சிவபெருமானின் மலரை அவமதித்ததால், உன் செல்வங்கள் அனைத்தும் உன்னை விட்டு விலகட்டும்’ என்று இந்திரனுக்கு சாபமிட்டார். இதையடுத்து திருமாலிடம் சரணடைந்த இந்திரன், சாப விமோசனம் வேண்டி நின்றான். பாற்கடலில் தோன்றும் அமுதத்தை உண்டால் மட்டுமே சாபம் நீங்கும் என அறிவுறுத்தினார், திருமால். அதன்படி, அசுரர்களின் துணை கொண்டு, வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்தார மலையை மத்தாக்கி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது நஞ்சு வெளிப்பட்டது.

அந்த ஆலகால விஷத்திற்கு அஞ்சிய தேவர்கள் அனைவரும், சிவபெருமானிடம் சென்று தஞ்சம் அடைந்தனர். எம்பெருமான் நஞ்சை உண்டார். அது அவரது உடலுக்குள் செல்லாமல் இருக்க, அன்னை பார்வதி ஈசனின் கழுத்தைப் பிடித்தாள். இதனால் நஞ்சு கழுத்திலேயே தங்கிவிட்டது. அவரது கழுத்து நீல நிறமாக மாறிது. இதனால் சிவபெருமான் ‘நீலகண்டர்’ என்று அழைக்கப்பட்டார். நஞ்சை உண்ட பிறகு இத்தலம் வந்து மவுனமாக வீற்றிருந்தார். அனைவரும் நீலகண்டரை வழிபட்டனர். துயர் அடைந்தவர்கள் இன்பம் பெறும் வகையில், ஏழரை நாழிகை எனும் சாம நேரத்தில் சிவபெருமான் அருள் செய்தார் என இத்தலவரலாறு கூறுகிறது

இத்திருத்தலத்தில் மூலவராக கைலாசநாதர் கிழக்கு முகமாய் அருள்பாலிக்கிறார். இறைவியாக  பிரகன்நாயகி எனும் பெரியநாயகி. இவரது சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. அன்னை மேற்கு நோக்கி, மேல் இரு கரங்களில் தாமரை மலர் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை தாங்கியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். திருமணம் வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவிப்பார்கள். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இதன்மூலம் திருமணத்தடை நீங்கி, விரும்பிய வரம் கிடைப்பதாக இங்கு வரும் பக்தர்கள் நம்புகின்றனர்.



Leave a Comment