திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் தெப்போற்சவம்


 108 வைணவத் தலங்களுள் ஒன்றாக போற்றப்படும்  திருவள்ளூர் வீரராகவபெருமாள் திருக்கோயிலில் ஆனி மாத விசேஷமாக இன்று (12-07-2018) வீரராகப்பெருமாள் தெப்போற்சவம் நடைபெறுகிறது. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்தடுக்கு இராசகோபுரத்துடன் பிரம்மாண்டமாய் காட்சிதரும் இத் திருக்கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது.

புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய் பிறந்த சாலிஹோத்ரர் எனும் முனிவர் இத்திருத்தலம் இருக்குமிடத்தில் தவம் செய்து வந்தார். தினமும் அதிதிக்கு படைத்த பின்பு உண்ணபவரான சாலிஹோத்ர முனிவரின் அதிதியாக பெருமாளே வயோதிகர் வடிவில் வந்து உணவு பெற்றார். பசி தீராததாகக் கூறி முனிவரின் பங்கையும் உண்டு பசியாறிய பின்னர் உண்ட களைப்பு தீர எங்கே படுப்பது என முனிவரிடம் கூற, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார். "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று என்ற இத்திருத்தலத்தின் வரலாறு கூறுகிறது.

இக்கோவிலில் மூலவராக வீரராகப் பெருமாள் காட்சியளிக்கிறார். கனகவள்ளி அம்மையார், கனேச ஆழ்வார், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகன், இராமானுஜ ஆச்சாரியார், லட்சுமி நரசிம்மர். ஆகியோருக்கு இங்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. தீராத நோய்களை வீரராகவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் மக்கள் சிறிய உலோகத் தகட்டில் நோயினால் பாதிக்கப்பட்ட உறுப்பைச் செதுக்கி அந்நோயைத் தீர்த்து வைக்குமாறு கடவுளிடம் கோரிக்கை சமர்ப்பிப்பதை பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் ஆனி மாத விசேஷமாக இன்று (12-07-2018) தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது.  இந்த விசேஷத்தை கண்டு பெருமாளை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துள்ளனர்.



Leave a Comment