செல்வ வளம் தரும் திருப்பூந்துருத்தி திருத்தலம்


திருப்பூந்துருத்தி திருத்தலம் சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தர்ய நாயகி. ஐந்து நிலைகளுடன் கிழக்கு பார்த்த ராஜகோபுரம் உள்ளது.
இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் எப்படி சாத்தியம்.. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது.

ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். ‘ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிர பரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்’ என்ற ஏக்கத்துடன் அவர்களின் பேச்சு இருந்தது.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், ‘ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்’ என்றார்.

பின்னர் காசிப முனிவர், ஈசனை வேண்டி தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார்.

மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். (அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது). காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது. காசிப தீர்த்தம் இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது.

இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும்.

மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரி பூரணமாய் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.



Leave a Comment