பூமிக்கு அடியில் சித்ரா பௌர்ணமி


காஞ்சிபுரத்திலிருந்து தென்மேற்கே ஏழு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, ‘ஐயங்கார் குளம்’ எனும் திருத்தலம். இங்குள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி உள்ள பெரிய குளத்தின் அருகே நடவாவிக் கிணறு என்ற சிறப்பு வாய்ந்த கிணறு உள்ளது.


இந்தக் கிணற்றுக்குள் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகள் வழியாகக் கீழே சென்றால் கருங்கல்லால் ஆன, அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று ஆய்வாளர்கள் கூறுவர்.


எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும் இந்தப் பெரிய கிணற்றில் ‘சித்ரா பௌர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றிவிடுவார்கள். அன்று மாலை பூமிக்கு அடியில் (கிணறு) அமைந்துள்ள 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமானை எழுந்தருளப் பண்ணுவார்கள்.


மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்கிறார்கள். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும். இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.



Leave a Comment