ஏப்ரல் 27-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்


சித்திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்வாக மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் தீபாராதனை காட்டி கொடி மர பூஜை செய்யும் சிவாச்சாரியார்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.
இரவு மாசி வீதிகளில் எழுந்தருளிய சுவாமி, அம்மனை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். மதுரையில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் நடைபெறும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்மலை கள்ளழகர் கோயில் இணைந்த சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
நிகழாண்டு புதன்கிழமை காலை நடைபெற்ற கொடியேற்றத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபம், அதன் முன்பகுதி மலர் பந்தல்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கம்பத்தடி மண்டபத்தில் மேளதாளம் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து பூஜை செய்தனர். காலை 9.30 மணிக்கு கொடி மர பூஜை தொடங்கியது. அப்போது கொடிமரம் முன்பு சுவாமி, பிரியாவிடையுடனும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர்.
சுவாமி, அம்மன் முன்னிலையில் கொடிமரத்துக்கு நான்கு புறமும் தர்ப்பைப் புல் வைத்து பூஜை செய்தனர். பின்னர் பூக்களால் பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.10 மணிக்கு மிதுன லக்னத்தில் காளை உருவம், சிவலிங்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை நிற கொடி மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது. காலை 11.20 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்றதும் சுவாமி, அம்மன் கோயிலுக்குள் குலாலர் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன், மாநகர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கோயில் இணை ஆணையர் என். நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாசி வீதிகளில் அருள்பாலிப்பு: புதன்கிழமை இரவு சுவாமி, பிரியாவிடை கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர்.
அம்மன், சுவாமி வாகனங்களுக்கு முன்னதாக கோயில் யானை, காளை ஆகியவை வலம் வந்தன. சுவாமி உலாவை அறிவிக்கும் வகையில் பக்திப் பாடல்களுடன் வாகனங்கள் வலம் வர அதன் பின்னர் சிவபக்தர்கள் சிவ இசைகளை இசைத்தபடி வலம் வந்தனர். குழந்தைகள் கோலாட்டம், சுவாமி வேடமணிந்து அணிவகுத்து வந்தனர். தொடர்ந்து பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலைஞர்கள் அணிவகுத்து வந்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகள்: விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 25-ம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகமும், 26-ம் தேதி திக் விஜயமும், 27-ம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 28-ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டமும் நடைபெறுகிறது.



Leave a Comment