மண்டலகால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது.

கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், 'ஒரு மண்டல காலம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, நவ. 17-ம் தேதி கார்த்திகை முதல் தேதி முதல் மண்டலகாலம் தொடங்குகிறது.

இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. கடந்த ஒரு ஆண்டு காலமாக சபரிமலையில் தங்கி பூஜைகள் செய்து வரும் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றுவார்.அதை தொடர்ந்து கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள சபரிமலை- வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைப்புறம் -நாராயணன் நம்பூதிரி இருமுடி கட்டு ஏந்தி கோயில் முன்புறம் வருவர். மாலை 6:30 மணிக்கு புதிய மேல்சாந்திகளுக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிஷேகம் நடத்தி, ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்து கோயிலுக்கு அழைத்து செல்வார். வேறு விசேஷபூஜைகள் எதுவும் நடைபெறாது.

இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.17-ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடைதிறந்ததும் இந்த ஆண்டுக்கான மண்டலகாலம் தொடங்கும். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு ஐயப்பனுக்கு அபிஷேகம் நடத்தி பிரசாதம் வழங்கியதும், நெய்யபிஷேகம் தொடங்கும். அன்றிலிருந்து தொடர்ச்சியாக 41 நாட்களும் அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடைபெறும். டிச., 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெறும்.ஏற்பாடுகள் தயார்மண்டல காலத்தில் வரும் பக்தர்களை வரவேற்க சன்னிதானம் தயாராகி விட்டது.

பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கும் அறைகளையும் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியும். கடந்த 15 நாட்களாக அப்பம் - அரவணை தயாரித்து ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. 50 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டுள்ளது. பாட்டில் குடிநீர் தடை செய்யப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பாதுகாக்கப்பட்ட குடிநீர் பிளான்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், வி‌ஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர விழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து ஐயப்பனை வழிபட்டு செல்வார்கள்.

இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.

18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, பு‌ஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி வரை தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

முன்னதாக 18-ந் தேதி காலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில், 2018-2019-ம் ஆண்டுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் நடப்பாண்டின் மண்டல சீசன் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன், 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜூன் 14-ந் தேதி திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை நாட்கள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அதற்கு முந்தைய நாள் மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் நெய் அபிஷேகம் நடைபெறும். இந்த நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகமும் நடைபெறுகிறது. ஆனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுவதையொட்டி, தரிசனத்திற்காக சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்துள்ளது. அத்துடன் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தினம்திட்டை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பஸ்களை இயக்க கேரள அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி ஐயப்பனை சபரிமலையில் குடியமர்த்தி பிரதிஷ்டை செய்ததை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் பிரதிஷ்டை தின விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடந்தது.

தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசித்தனர். தொடர்ந்து உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெற்றன. இரவில் பிரதிஷ்டை தின பூஜைகள் நிறைவு பெற்றன.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலையில் விஷூ பண்டிகையை ஒட்டி பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் விஷூ 'கைநீட்டம்' வழங்கினர். சபரிமலையில் சித்திரை விஷூ பூஜைகள் நடந்தது.

கடந்த 11ம் தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் இரவு 7:00 மணிக்கு படி பூஜையும் நடந்தது. சித்திரை ஒன்றாம் தேதி கடந்த 14ம் தேதி பிறந்தது. ஆனால் கேரள பஞ்சாங்க கணக்கு படி நேற்றுதான் கேரள கோயில்களில் விஷூ கொண்டாடப்பட்டது.

அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் பக்தர்கள் கோயிலுக்குள் அமைக்கப்பட்டிருந்த காய்கனி அலங்காரத்தை தரிசனம் செய்தனர், தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி, ஆகியோர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் மற்றும் பக்தர்களுக்கு நாணயங்களை 'கைநீட்ட'மாக வழங்கினார். ஏப்.,18 இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
கேரளாவில் ஓணம் பண்டிகையை போன்று விஷூ பண்டிகையையும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். விஷூ பண்டிகையின் போது கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்குரிய விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
வருகிற 15-ந் தேதி விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து கனி காணுதல் நிகழ்ச்சியுடன், பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள்.
தொடர்ந்து சித்திரை மாத பூஜைகள் நடைபெறுகின் றன. இந்த பூஜைகள் நிறைவு பெற்ற பின்பு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 18-ந் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 18- ந் தேதி வரை திறந்திருக்கும் என்பதால், ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Page 1 of 5