பித்ரு தோஷம் நீக்கும் லட்சுமி நாராயணப் பெருமாள்


தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். வாழ்வில் நிம்மதியாக வாழ வேண்டுமானால், நமக்கு எந்தவித தோஷமும் இல்லாமல் இருக்க வேண்டும்….குறிப்பாக பித்ரு தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும்.

பெற்றோருக்கு திதி கொடுக்காதவர்கள், திதி கொடுப்பதே என்ன என்று தெரியாமல் இருப்பவர்கள், வாரிசு இல்லாதவர்கள், விபத்து, தற்கொலை, அகால மரணமடைந்தவர்கள்… இவர்களின் ஆத்மாக்களுக்கு

சாந்தி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் தோஷம் ஏற்படும். இவை காலம் காலமாக தொடர்வதால் பித்ரு தோஷம் ஏற்பட்டு கால சர்ப தோஷமாக மாறும்.

இது வம்சாவளியாக தொடர்வதால் வீட்டில் கஷ்டம், திருமணத்தடை, விபத்து, செய் தொழிலில் நஷ்டம், நிம்மதியின்மை என அடிக்கடி நிகழும். இதற்கு ஒரே வழி அதற்கான தோஷ நிவர்த்தி செய்வது தான்… பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, ராமேஸ்வரம் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. அங்கு செல்ல முடியாதவர்கள் என்ன செய்வது?

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில். இத்திருத்தலத்தில் பித்ரு தோஷத்திற்கான நிவர்த்தி செய்யப்படுகிறது. பித்ரு வேளை பூஜை நேரமான பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கின்றனர்.

திதி கொடுப்பவர்கள் பெருமாள் சந்திக்கு சென்று, மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களின் பெயர்களை சொல்லி சங்கல்பம் செய்ய வேண்டும்.

பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும்.

அங்குள்ள, பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம்.

கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு. பெண்கள் தங்கள் பெற்றோர்களுக்கு சிரார்த்தம் செய்யலாம்.



Leave a Comment