இராமர் சன்னிதி அமைந்துள்ள.. அபூர்வ அம்மன் ஆலயம்!


பொதுவாக அம்மன் திருக்கோயில்களில் இராமர் சன்னிதியைப் பார்ப்பது மிகவும் அபூர்வம். இப்படிப்பட்ட ஓர் அபூர்வ ஆலயம்தான் சென்னை வடபழனி நூறடி சாலை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் ஆலயம். இந்தக் கோயிலின் நுழைவாசல் அருகே ஒரு பக்கத்தில் ஸ்ரீ ராமர் திருக்கோயில் என்கிற பெயர்ப்பலகையும், இன்னொரு பக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் ஆலயம் என்கிற பெயர்ப் பலகையும் காணப்படுகிறது. நூறடி சாலையை ஒட்டிக் கோயில் இருப்பதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலைத் சமாளித்தே கோயிலுக்குள் செல்ல வேண்டியிருக்கிறது என்றாலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்திற்குப் பஞ்சம் இல்லை.

நடைபாதையை ஒட்டிய நுழைவாசலின் மேல் சிறிய கோபுரம். நடுநாயகமாக ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் வீற்றிருக்கிறார். சுதை சிற்பம், கோபுரத்தில் வேறு சில சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயிலுக்குள் நுழைந்ததும் சிறிய மண்டபம் காணப்படுகிறது. அதனை ஒட்டிய கருவறை. கருவறையில் அன்னை ஸ்ரீ மந்தவள்ளி அம்மன் தரிசனம் தருகிறார். பத்மசானத்தில் அமர்ந்த கோலம். சுமார் இரண்டரை அடி உயரம் உள்ள கல் விக்ரகம். வலது கைகளில் திரிசூலம். அல்லி மொட்டு. இடது கைகளில் குங்குமச் சிமிழ், பாசாங்குசம்

சிகப்புப் பட்டாடை, மல்லிகைப் பூவால் கிரீடம், அதன் மேல் அலங்காரக் கிரீடம், ஆபரணங்கள், அன்னையில் அருள் மழை பொழியும் பார்வை. கீழே கழுத்தளவு உள்ள ஒரு சிறிய கல் விக்ரமும் காணப்படுகிறது. இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்பாளுக்குப் பௌர்ணமி பூஜை நடத்தப்படுகிறது, அமாவாசை பூஜையும் விசேஷமாக நடத்தப்படுகிறது. அடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணையும் நடைபெறுகிறது. இத்திருத்தலம் நூறாண்டு பழமையுள்ள கோவிலாகப் போற்றப்படுகிறது. மேலும் இத்திருத்தலத்தில் இராமர் சன்னதியுள்ளது. அதில் பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள இராமர், இலட்சுமணர், சீதை அனுமார் ஆகியவர்களின் விக்ரகங்கள் காணப்படுகின்றன. பக்தர்கள் வேண்டியதை நிறைவேற்றித் தரும் கோயிலாக இத்திருத்தலம் போற்றப்படுகிறது.



Leave a Comment