தஞ்சை பெரியகோவில் விமான கோபுரம் சுத்தப்படுத்தப்படுகிறது


பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1010-ம் ஆண்டு கட்டினான். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டீகேஸ்வரர், முருகர், நடராஜர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த கோவிலுக்கு நுழையும் இடத்தில் கேரளாந்தகன் கோபுரம் உள்ளது. அதைத்தொடர்ந்து ராஜராஜன் கோபுரம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக 214 அடி உயர விமான கோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள கேரளாந்தகன், ராஜராஜன், விமான கோபுரம் அனைத்தும் கடந்த 2008-ம் ஆண்டு புதுப்பிக்கும்பணி நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரத்தில் இருந்த பாசிகள், அழுக்குகள், பறவைகளின் எச்சம் போன்றவை சுத்தப்படுத்தப்பட்டு பின்னர் சுதை வேலைகள் நடைபெற்றன.
தஞ்சை பெரியகோவிலின் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து கோவிலில் பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கோவிலின் மேற்கு திருச்சுற்று மண்டபம் மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபத்தில் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கத்தை யாரும் தொடாமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்புகளின் உயரம் 3 அடியாக இருந்ததால் பக்தர்கள் அதன் உள்ளே சென்று விடுகின்றனர். அதனால் தடுப்புகளை உயர்த்தி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இந்திய தொல்லியல் துறையினர் தற்போது 6 முதல் 6½ அடி உயரம் வரை மரக்கட்டைகளால் தடுப்புகளை அமைத்து வருகின்றன. மேலும் சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்யும் வகையில் ஆங்காங்கே கதவுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் தெற்கு திருச்சுற்று மண்டபம், வடக்கு திருச்சுற்று மண்டபம், மேற்கு திருச்சுற்று மண்டபத்தில் உள்ள கதவுகளும் சீரமைக்கப்படுகின்றன.
இதன் அடுத்த கட்டமாக 214 அடி உயர விமான கோபுரம் சுத்தம் செய்யப்படுகிறது. முதலில் விமான கோபுரமும் அதைத்தொடர்ந்து மற்ற கோபுரங்களும் சுத்தம் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளது.



Leave a Comment