புனிதம் வாய்ந்த குடந்தை மகாமக திருக்குளம்


வட மாநிலங்களில் அலகாபாத், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புண்ணிய நதிகளில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா தமிழகத்தின் பெருமளவு பக்தர்கள் குவியும் விழாவாக இருக்கிறது. இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களையும் போக்கி புண்ணியம் தருவதாகும். மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை,யமுனை,நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமமாகி நீராட வருவதாகவும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் இங்கு புனித நீராடவருவதாகவும் ஐதீகம். எனவே குடந்தை மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்தக் குளத்திற்குள் 20 தீர்த்தக்கிணறுகளும், குளத்துடன் சேர்த்து 21 தீர்த்தங்களாகிறது. குளத்தின் 4 கரைகளை சுற்றிலும் 16 சோடச லிங்கங்களும் உள்ளன. புனித குளமான மகாமக குளம் சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. சதுரமாகவும் இல்லாமல், செவ்வகமாகவும் இல்லாமல் அரூபமாக காணப்படும். குளத்திற்கு அரசலாற்றிலிருந்து தண்ணீர் வருவதற்கும், குளத்தின் தென் கிழக்கு மூலையில் தண்ணீரை வெளியேற்ற வடிகாலும் உள்ளது. அதனால் அங்குள்ள தெருவிற்கு வடிவாய்க்கால் தெரு என்ற பெயரும் உண்டு.



Leave a Comment