திருவெண்காடு கோயிலில் இந்திரப் பெருவிழா கொடியேற்றம்...


திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயிலில் வருடாந்திர இந்திரப் பெருவிழா உத்ஸவ கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சீர்காழி அருகேயுள்ள திருவெண்காட்டில் உள்ளது பிர்ம்மவித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேசுவரர் சுவாமி கோயில். இக்கோயிலில் அகோரமூர்த்தி சுவாமி, நவக்கிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்றழைக்கப்படும் புதன் பகவான் தனிதனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். காசிக்கு இணையான 6 கோயில்களில் முதன்மையானது இக்கோயில் ஆகும். இக்கோயிலில் சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியிலிருந்து உருவான அக்னி, சந்திரன், சூரியன் ஆகிய முக்குளங்கள் உள்ளன. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாள்கள் இந்திரப் பெருவிழா உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு உத்ஸவம் பூர்வாங்க பூஜைகள், விக்னேஸ்வரபூஜையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. தொடர்ந்து, பஞ்சமூர்த்தி மகா மண்டபம் பிரவேசம் நடந்தது. உற்தவ கொடியேற்றம் நடைபெற்றது. 27-ஆம் தேதி கைலாச வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், 28-ஆம் தேதி பிற்பகல் சுவேதராஜா மணிக்கர்ணிகையில் ஸ்நானம் செய்து திரும்புகையில், தர்மராஜா வழிமறித்தல் பின்னர் எமசம்ஹாரம் நடைபெறுகிறது.
மார்ச் 1-ஆம் தேதி அகோரமூர்த்தி மகாமண்டபம் பிரவேசமும், 2-ஆம் தேதி அகோரமூர்த்திசுவாமி நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளல், இரவு மருத்துவன் இம்சையால் நந்திகேஸ்வரர் வந்து தரிசிப்பதும், மருத்துவ சம்ஹாரமும், வெள்ளி ரிஷப வாகன காட்சி, சகோபுரத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறவுள்ளது. 4-ஆம் தேதி பிர்ம்மவித்யாம்பிகை அம்மன், சுவேதாரண்யேசுவரர் சுவாமி திருக்கல்யாண உத்ஸவம், இரவு முத்துப்பல்லக்கில் காட்சி நடைபெறுகிறது.
மார்ச் 5-ஆம் தேதி பிட்சாடனார் இந்திர விமானத்திலும், 63 நாயன்மார்களுடன் வீதியுலா காட்சியும், 6-ஆம் தேதி விநாயகர், முருகன், சுவாமி-அம்பாள் திருத்தேரில் எழுந்தருளும் தேர் திருவிழா நடைபெறுகிறது. 7-ஆம் தேதி கொடியிறக்கம், 9-ஆம் தேதி சந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறவுள்ளது.



Leave a Comment