மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயிலில் கிழக்கு திசையில் வடக்கு நோக்கி பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. விராலிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் மெய்கண்ணுடையாள் அம்மன் சிலைக்கு ஆரம்ப காலத்தில் மேற் கூரை அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தி வந்தனர். வேண்டுவோருக்கு வேண்டியதை கொடுத்து வரும் அம்மனை கிராம காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் அம்மனுக்கு புதிய கோயில் கட்ட முடிவு செய்தனர். அப்போது மூல ஸ்தானத்தை விரிவுபடுத்த அம்மனின் சிலையை நகர்த்த முயன்ற போது அம்மன் சிலையை நகற்ற முடியவில்லை.

எனவே சிலையை அப்படியே வைத்து சுற்று புறத்தினை மட்டும் புதுப்பித்துள்ளனர். விராலிமலை அருகில் உள்ள வேலூர் பிள்ளை பண்ணை குடும்பத்தினரே பூஜைகளை செய்து வந்துள்ளனர். பின்னர் விராலிமலையில் அதிகமாக வாழும் இசைவேளாளர் குடும்பத்தினர் பூஜைகளை செய்து பராமரித்து வந்தனர். நுழைவு வாயில ராஜகோபுரம் விராலிமலையை சேர்ந்த நாச்சாரம்மாள் என்பவராலும், அடிதளம் ஊர் மக்களாலும் கோயில் பிரகாரத்தில் மேற்கில் கிழக்கு நோக்கி விநாயகர் கோயிலும் கட்டப்பட்டு சுற்று சுவர் எழுப்பட்டுள்ளது. தற்போது இக்கோயிலை அறநிலைய துறை நிர்வகித்து வருகிறது. விராலிமலை முருகன் கோயிலில் பூஜையை முடித்த பின்னர் தான் அர்ச்சகர்கள் இங்கு வந்து அம்மனுக்கு தினமும் மதியம் மற்றும் மாலை நேரத்தில் பூஜை செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத்தில் பூச்சொரிதல் விழாவும், சித்திரை திருவிழாவும் நடைபெறுகிறது. விழாவின் போது பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்தும், அலகு குத்தி, காவடி எடுத்து தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றுவர். மார்கழி மாதம் முதல் வெள்ளி அல்லது செவ்வாய் கிழமைகளில் துவங்கும் குத்து விளக்கு பூஜை தை முதல் நாள் வரை இரு வேளையும் நடைபெறும். இதில் ஆயிரக்கனக்காக பெண்கள் கலந்துகொள்வர். மார்கழி மாதம் இரவு தினமும் ஊச்சாதுறை வழிபாடு நடைபெறும். மேலும் அம்மன் கோயிலில் நடைபெறும் அனைத்து நவராத்திரி மற்றும் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததையொட்டி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தெப்பகுளத்தில் இருந்து புனித நீர் ஊர் வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலை பூஜைகள் துவங்கியது. கணபதி ஹோமம். நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தன பூஜை யாகசாலை பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை 9.30க்கு மேல் புனித நீர் மங்கள இசையுடன் கோயிலை வலம் வந்து கும்பத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்ற கும்பாபிஷேகம் பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மெய்கண்ணுடையாள் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில்ட விராலிமலை மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Leave a Comment