பஞ்சபூதங்களில் ஆகாயம் தலமான சிதம்பரம் நடராஜர் கோவில்


பஞ்சபூதங்களில் ஆகாயத்தை தலமாக சிதம்பரம் நடராஜர் கோவில். ஆகாச தலமான இங்கு இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஆகாயமாக அருள்புரிகிறார். சிவனின் வழிபாட்டுப்பாடல்களின் ஆரம்பம் மற்றும் முடிவில் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுவது இத்தலமே. எல்லாவற்றிற்கும் ஆரம்பம் மற்றும் முடிவு ஆகாயம் என்பதை உணர்த்தத்தான் திருச்சிற்றம்பலம் என்று கூறப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்றே குறிப்பிடப்படுகிறது. இங்கு இறைவன் உலக உயிர்கள் உய்யும்பொருட்டு தனது ஆனந்த தாண்டவத்தை பதஞ்சலி, வியாக்கிரதபாதர் மற்றும் உலக உயிர்களுக்கு காட்டி அருளுகிறார். பஞ்ச சபைகளில் இத்தலம் பொன்னம்பலம், கனக சபை என்று வழங்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்பினைப் பெற்றுள்ளது இத்தலம். இங்கு மகாவிஷ்ணு கோவிந்தராஜப் பெருமாள் என்கின்ற நாமத்துடன் புண்டரீகவள்ளித் தாயாருடன் அருள்புரிகிறார். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இத்தலமும் ஒன்றாகும். இங்கு இறைவன் நடராசன் என்ற பெயரிலும் அம்மை சிவகாமி என்ற பெயரிலும் அருள்புரிகின்றனர். பஞ்சபூதங்களின் வடிவில் உலகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனான சிவபெருமானை போற்றி வணங்குவோம்.



Leave a Comment