நரசிம்மர் உலாவரும் தலம்

02 January 2018

கோவிந்தனின் இருப்பிடம் திருமலை. இம்மலை தொடராக அமைந்துள்ளது. இது ஒரு காட்சிக்கு ஆதிசேஷன் தலை தூக்கி, உடல் நீட்டி படுத்து இருப்பது போல் காணக்கிடக்கிறது. இவ்வுடம்பில் தலைப் பகுதியில் திருமலையும், உடற் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீசைலமும் கொண்டு இருப்பது காணக் கண் கொள்ளாக் காட்சி.
அஹோபிலம்", பகவன் நாராயணன் ஹிரண்ய கசிபுவை முக்தியடயச்செய்ய அவதாரம் எடுத்த தலம். தேவர்கள் பெருமாளை காணும்பொழுது "ஹிரண்ய கசிபுவின்" வதம் எப்படி நடந்தது என்று கேட்க்க, பெருமாளும் நாடகத்தை நடத்திக்காட்டி அருளும் தலம். இன்றும் நரசிம்மர் அரூபமாகவும், ரூபமாகவும் வலம் வரும் தலம். மிகவே அமானுஷ்யமான புண்ய ஸ்தலம். நரசிம்மருக்கு ஒன்பது கோயில்கள் உள்ளது. மலைமேல் தனியாக செல்லக்கூடாது. கொடிய மிருகங்கள் வாழும் இடம்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள இத்தலத்தின் பெருமையை எங்கேயும் காண முடியாது. கருணாமூர்த்தியான எம்பெருமான் நாம சக்கரவர்த்தியான பிரஹல்லாதனுக்கு அருள் பாலித்தவர். இங்கே காணப்படும் இப்பெருமானின் நவ கோலங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பக்தன் பிரஹல்லாதனுக்கு அருள் பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக்கொண்டவர், ஜுவாலா நரசிம்மர்.
பின்னர் கோபம் தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்துகொள்கிறார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்று சுட்டப்படும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை சாதாரணமாகத் தெரிகிறது. இந்த அற்புதத்தை இன்றும் காணலாம்.
இந்த நரசிம்மருக்குப் பானகம் நிவேதனம் செய்தால் கடன் தொல்லை தீரும் என பக்தர்கள் கருதுகிறார்கள். இங்கு தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். செஞ்சுலக்ஷ்மி என்ற தாயாரின் அம்சமான ஆதிவாசிப் பெண்ணை மணந்ததால் பெருமாளின் திருநாமம் மாலோலன். இவ்வூரின் பெயரே மந்திரம். அஹோபிலம் மஹாபலம் என்று சொன்னால் உடல், மனம் வாக்கு, புத்தி ஆகியவற்றுக்கு மஹாசக்தி. மாலோலன் மனத்துக்கு இனியன்.