தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா


பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா டிசம்பர் 24-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் விமர்சையாக நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா டிசம்பர் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் அதாவது ஜனவரி 2 ஆம் தேதி வரை மார்கழி திருவிழா நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான 24-ந் தேதி காலை 6 மணிக்கு மாணிக்க வாசகர் பூஜை நடைபெறும். காலை 7.30 மணிக்கு மேல் தாணுமாலய சன்னதியின் எதிரே உள்ள கொடிமரத்தில் தெற்குமண்மடம் ஸ்தானிகர் கொடியேற்றி வைக்கிறார். வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சிறப்பு பூஜைகளை செய்கிறார். தொடர்ந்து பக்தி இன்னிசையும், திருமுறை பெட்டக ஊர்வலமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு தேவார இன்னிசையும் அதனைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 25-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதி உலா வருதல், காலை 8 மணிக்கு பூங்கோவில் வாகனத்தில் சந்திரசேகரர் திருவீதி உலா வருதல், மாலை 4 மணிக்கு சமய சொற்பொழி, இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறும். 26-ந் தேதி காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவு, 10.30 மணிக்கு சாமி திருவீதி உலா வரும் போது கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசாமி தனது தாய் தந்தையர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 27-ந் தேதி காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சாமி வீதி உலா வருதலும், மாலை 6.30 மணிக்கு சுகி சிவத்தின் பட்டிமன்றமும், இரவு 10 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடைபெறும். 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனமும், காலை 6 மணிக்கு வீர மார்த்தாண்ட விநாயகர் திருக்கோவில் முன் சாமி அம்பாள் பெருமாள் மும்மூர்த்திகளை கருடன் வலம் வரும் அற்புத காட்சியும், மாலை 5.30 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வைத்து சாமிக்கு அஷ்டாபிஷேகமும், இரவு 7.30 மணிக்கு சுகிசிவத்தின் ஆன்மிக சொற்பொழிவும், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 29-ந் தேதி காலை 8 மணிக்கு வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், மாலை 5 மணிக்கு யானை ஸ்ரீபலி, இரவு 10 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல் ஆகியவை நடைபெறுகிறது. 30-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பல்லக்கில் சாமி திருவீதி உலா வருதல், இரவு 8 மணிக்கு மகாராஜன் குழுவினரின் இன்னிசையும், 10.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், பேரம்பலம் திருக்கோவில் முன் நடராஜ பெருமான் ஆனந்த திருநடன காட்சியும், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வருதலும், 8.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜனவரி 1-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன. இரவு 7 மணிக்கு போக்குவரத்து ஊழியர்களின் சிறப்பு நிகழ்ச்சியான மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதலும், நள்ளிரவு 12 மணிக்கு சப்த வர்ண காட்சியும், திருவிழாவின் இறுதி நாளான 2-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனமும், 5 மணிக்கு நடராஜ மூர்த்தி திருவீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆறாட்டு விழாவும் நடக்கிறது.



Leave a Comment