சனி தோஷம் நீக்கும் திருவாலங்காடு சிவன் கோயில்


திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான் காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.
திருவள்ளூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாலங்காடு மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம். சென்னை திருப்பதி சாலையில் திருவள்ளூர் தாண்டியவுடன், திருத்தணிக்கு முன்பாகவே இடதுபுறம் அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ளது. சிவ பெருமானுக்கான ஐந்து சபைகளில் இது ரத்தினசபை ஆகும். காரைக்காலம்மையாருக்கு நடராஜப் பெருமான் காட்சி தந்து ஆட்கொண்ட தலமாகும் இது. இத்தலத்தில் இறைவனின் காலடியில் காரைக்கால் அம்மையார் இன்றும் வாழ்வதாக ஐதீகம். காளிக்கும் சிவபெருமானுக்கும் இடையே நர்த்தனப் போட்டி ஏற்பட்டபோது, ஊர்த்வ தாண்டவத்தை ஆடி சிவபெருமான் காளியை அடக்கியது இத்தலத்தில்தான். இறைவன் வடாரண்யேஸ்வரர் என்றும் ஊர்த்வ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வண்டார்குழலியம்மை. இறைவன் சுயம்பு லிங்கமாகவும், இறைவி நின்ற திருக்கோலத்திலும் காட்சிதந்து அருள்பாலிக்கின்றனர். வெளியே ஐந்து நிலை ராஜகோபுரமும் உள்ளே மூன்று நிலையுள்ள இரண்டாவது கோபுரமும் கொண்ட ஆலயம் இது. கோவிலுக்குள் நுழைந்தவுடன் இருக்கும் மண்டபத்தில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. கோபுரங்களிலும் கோவில் உட்புறங்கள்லும் அழகான சுதைச்சிற்பங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. காரைக்கால் அம்மையார் வரலாறு, மீனாக்ஷி திருக்கல்யாணம், இறைவனின் ஐந்து சபைகள் ஆகியவை சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. உற்சவ மூர்த்திகளாக சிவபெருமானின் ஊர்த்வ தாண்டவ கோலமும், சிவகாமி அம்மையாரும், காரைக்கால் அம்மையாரும் நம்மைக் கவர்கின்றனர். இத்தலத்தில் பைரவர் வாகனமின்றி காட்சி தருகிறார். ஸ்படிக லிங்கமும், மரகத லிங்கமும் இங்கே விமரிசையாகப் பூஜிக்கப்படுகின்றன. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது. இத்திருத்தலத்தில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் (திருவாலங்காடு செப்பேடுகள்) சம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்ட சாசனங்களில் சோழ வரலாற்றைக் கூறுகின்றன. இத்தலத்தின் வெளிப் பிராகாரத்தில் உள்ள மாந்தீஸ்வரர் சந்நிதி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சனி பகவானின் இரண்டு மைந்தர்களில் ஒருவர் மாந்தி. ஒருமுறை, மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு திருத்தலம் வந்து ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப்பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் மாந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் மாந்தீஸ்வரருக்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.



Leave a Comment