குழந்தைப்பேறு தரும் கல்யாண ரங்கநாத பெருமாள்...


நாகை மாவட்டம், சீர்காழி அருகே திருநகரி கிராமம் உள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 108 திவ்யதேசங்களில் ஒன்றான கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. மந்திர உபதேசம் பெற்ற திருமங்கை, அஞ்ஞானம் அழிந்து தத்துவ ஞானம் கைவரப்பெற்றார். இறைவன் மீது நான்கு வகை கவிகளையும் பாடினார். தொடர்ந்து இறைவனின் பல தலங்களுக்குச் சென்று பெருமாளை வணங்கி, மங்களாசாசனம் பாடியுள்ளார். இதன் பிறகு திருமங்கை மன்னன் திருமங்கையாழ்வார் என அழைக்கப்படுகிறார். திருநகரி கல்யாணரங்கநாதர் கோவிலில், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். மாதந்தோறும் கார்த்திகை நாளில் திருமங்கையாழ்வாருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அந்நாளில் திருமங்கையாழ்வாரை வழிபட்டால் கல்வி செல்வம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்பட சகல செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம். வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும். இவரது சன்னிதியில் திருமங்கையாழ்வார் பூஜை செய்த ‘சிந்தனைக்கினியான் பெருமாள்’ தேவியர்களுடன் அருள்பாலிப்பது சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாதம் 10 நாட்கள் திருமங்கை ஆழ்வார் கார்த்திகை உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும். இந்த கோவில் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் புதுத்துறை மண்டபம் என்ற இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்திலும் திருநகரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது.



Leave a Comment