நினைத்தது நிறைவேற பர்வதமலைக்கு செல்லுங்கள்!


 

நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை நினைக்காமலே முக்தி தருவது பர்வதமலை. பர்வதமலை' என்றால் மலைகளுக்கெல்லாம் மலை. இம்மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும் இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது.

கயிலாயத்தில் இருந்து சிவபெருமான் திருவண்ணாமலைக்கு வந்தபோது பர்வத மலையில் ஒரு காலை வைத்து மற்றொரு காலை திருவண்ணாமலையில் வைத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த மலை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது. இந்தமலை `கடலாடி' என்னும் கிராமத்தையும், தென்மாதி மங்கலம் என்னும் கிராமத்தையும்தன் அடிவாரத்தில் கொண்டிருக்கிறது. கம்பீரமான தோற்றம் கொண்ட இம்மலையின் பரப்பளவு 5500 ஏக்கர். மலையின் உயரம் சுமார் 4500 அடிகள். இம்மலையைச் சுற்றிலும் 365 குளங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது.

எனவே இரு வழிகளிலும் மலையேறலாம். இந்த மலையானது, சில கோணங்களில் இருந்து பார்க்கும்போது திரிசூலவடிவில் தெரிவதால், இதனைத் `திரிசூலகிரி' என்றும் கூறுகின்றனர். இங்கு சித்தர்கள் இன்றும் வாழ்கிறார்கள் என்று கருதப்படுகிறது. இதுதவிர கந்தமலை, அகத்தியமலை, மங்களமலை, நந்தி மலை என்றும் இந்த மலை அழைக்கப்படுகிறது.

பர்வதமலை மிக உயரமான சிகரத்தை உடையதால், `பர்வதகிரி' என்றும், இம்மலையில் மிகச்சிறந்த பல அரிய மூலிகைகள் நிறைந்திருப்பதால், `சஞ்சிவிகிரி' என்றும், ஒரு காலத்தில் அகத்தியரால் இம்மலையில் திரிசூலம், நாட்டப்பட்டதால் `திரிசூலகிரி' என்றும், பர்வதராஜன் மகளாகிய பார்வதி தேவி இங்கு வந்து தங்கியதால், `பர்வதம்' எனவும் பெயர் பெற்றிருக்கிறது.

சிலர் இம்மலையை `ஸ்ரீசைலம்' என்றும் அழைப்பதுண்டு. மகாலட்சுமி திருமாலைத் திருமணம் புரிவதற்காகப் பல இடங்களில் தவம் செய்து அது முடியாமற் போகவே அதன்பின் இப்பர்வதமலையைத் தேர்ந்தெடுத்து, இங்கு வந்து தவம் செய்தார். இதனைக் கண்ட சிவபெருமான், பர்வதமலையில் தவம் செய்யும் மகாலட்சுமியை உடனே திருமணம் செய்து கொள்வாயாக என்று திருமாலுக்கு எடுத்துரைக்க, அதன் பின்னர் திருமகள் திருமணம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.

இதனால் இம்மலைக்குச் சென்று வருபவர்கள் தங்களின் எண்ணம் ஒவ்வொரு முறையும் நிறைவேறுவதை உணர்கின்றனர். இதற்குக் காரணம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியே இங்குத்தவம் செய்ததால் தான். தவம் செய்து அதன் பலனால் மகாலட்சுமியின் எண்ணம் ஈடேறியதால், இம்மலை `மங்களமலை' என்று அழைக்கப்படுகிறது.

 இம்மலையில் உள்ள தெய்வத்துக்கு ஒரு முறை தீபமேற்றி வணங்கினால், வருடத்தில் 365 நாட்களுக்கும் தீபமேற்றி வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும். பர்வத மலையில்  பவுர்ணமியின் பொது சென்று வழிப்பட்டால் அனைத்து விதமான நன்மைகளும் பெறலாம்.

 



Leave a Comment