அதிசயம்! தலைகீழாக விழும் கோபுர நிழல்...


இந்தியாவின் மிக பழமையான இடங்களில் ஒன்று கர்நாடக மாநிலத்திலுள்ள ஹம்பி. இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு புதிரளிக்கும் வகையில் இங்குள்ள கோயில் ஒன்றில் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்போது தலைகீழாக தெரிகிறது. அந்த கோயில்தான் விருபாட்சா கோயில். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோயில், கட்டடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது.

பெங்களூரு- குண்டக்கல் சாலையில் அமைந்துள்ள ஹம்பி, விஜய நகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. இங்குள்ள பம்பபதி மற்றும் விருபாட்சர் சிவன் கோவில்கள், கலை பொக்கிஷமாக திகழ்கின்றன. அன்னை பார்வதி, பம்பா தேவி என்ற பெயரில் பூமியில் பிறந்தாள். இத்தலத்தில் தவமிருந்து, சிவனைக் கணவராக அடைந்தாள். அரக்கர்களை வெல்வதற்காக வீரம் மிக்க ஆண் குழந்தையை பெற்றாள். பம்பாதேவியை மணந்த சிவன் இங்கு லிங்க வடிவில் கோவில் கொண்டார். சிவனுக்கு "பம்பபதி' என்றும், ஊருக்கு "பம்ப ஷேத்திரம்' என்றும் பெயர் ஏற்பட்டது. இதுவே நாளடைவில் "ஹம்பி' என மாறியது. கோவிலின் வெளி பிரகாரம் மிகப் பெரியது. இதிலுள்ள ஒரு மண்டபத்தில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபம் சிறிய அளவில் உள்ளது. இதன் நடுவே செல்லும் வடிகால் கால்வாய் வழியாக துங்கபத்திரா ஆற்று நீர் மடப்பள்ளியை அடைந்து, வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. இங்குள்ள ராயர் கோபுரம் மூன்று தளங்கள் கொண்டது. இதைச் சுற்றிலும் சிறிய சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் என ஒரு நகரத்தைப் போல கட்டமைத்துள்ளனர். கலை ஆர்வலர்கள் இந்தக் கோவில்களுக்கு சென்று வரலாம். இந்த கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது.



Leave a Comment