மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்


 

மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

 

64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம் இருக்கும் புன்னியத்தலமான ஸ்ரீவாஞ்சியம், சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஆகும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம். அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திகழும் திருவாஞ்சியம், பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது. தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் என்பதால் இது ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகிற  ஸ்ரீவாஞ்சியத்தில் உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இங்குள்ள  குப்தகங்கையில் நீராடி ,பின் இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் தான் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும் என்கிறார்கள். நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.

 

                                                                        

எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் ,கோயில் அருகில் யாராவது இறந்து விட்டாலும் கூட ,பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடக்கிறது.

தலத்தின் புராணக்கதை

பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடிப் பார்க்கையில், காவிரிக் கரையில் கண்ட திருவாஞ்சியத்தின்  அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர் என்கிறது புராணம்.

 மேலும் ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரின் பாவங்களை சுமந்ததால் ,தனக்கு ஏற்பட்ட பாவத்தை எங்கனம் போக்குவது என்று கேட்க,  அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

 

ஸ்ரீவாஞ்சியத்தின் எண்ணிலடங்கா சிறப்புகள்

ஒருவர் திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை,தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

இத்தலத்தின் சிவனின் முன் யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்டவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஸ்ரீவாஞ்சியத்தில் அருள் பாலிக்கும் மங்கலாம்பிக்கையை வணங்க , மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வர்.

ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலமாகவும்,காலசர்ப்பதோஷத்திற்கான தலமாகவும் விளங்குகிறது. சனிபகவான் அதிதேவதையான எமதர்மராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறலாம்.

 நம் இறுதி காலம் முடிந்தபின் ,நமது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே ‘ஆத்ம தர்ப்பணம்’ செய்து, முக்தி கிடைக்க வழி செய்துக்கொள்ளலாம்.

இத்தலத்தில் இறந்தாலோ அல்லது ,இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலோ  சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்டுள்ள ஸ்ரீவாஞ்சி திருத்தலம் வாழ்வில் நாம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய புண்ணிய தலமாகும்.

 

 



Leave a Comment