வேலூர் லட்சுமி நாராயணி (தங்கக்கோயில்)


இங்கு லட்சுமி நாராயணி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தங்கத்தால் ஆன கோயில்.இக்கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிள், தங்கக்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும்.

 

பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி செல்போன், கேமரா, தின்பண்டங்களை வாசலிலேயே ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். கோயிலுக்குள் பக்தர்கள் நடந்து செல்லும் வழியெங்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது.

 கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது. இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன. கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் பச்சைப்பசேல் என்றுகாட்சியளிக்கின்றன

தென்றல் காற்று இதமாக வீசுகிறது மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது. கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.  பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது.

அம்மன் எதிரே 27 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன பிரமாண்டமான 10 அடுக்கு கொண்ட விளக்கு உள்ளது. இதில் ஆயிரம் திரிகள் போட்டு விளக்கு ஏற்றலாம். கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன. கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது.

திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு.மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள்.

தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது



Leave a Comment